திவாலாகும் பாகிஸ்தான்.. "கை கொடுக்கும் பிரதமர் மோடி.." ரா முன்னாள் தலைவர் பரபர! ஏன் முக்கியம்
பாகிஸ்தான் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
டெல்லி: பாகிஸ்தான் இப்போது மிக மோசமான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு உதவுவார் என்று ரா அமைப்பின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு பிறகு பல நாடுகள் வரிசையாகப் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.. முதலில் நமது அண்டை நாடான இலங்கையில் இக்கட்டான சூழல் ஏற்பட்டது அனைவருக்குமே தெரியும்.
இதற்கிடையே அதேபோல ஒரு மோசமான சூழலைப் பாகிஸ்தான் இப்போது எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உதவ இப்போது சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது. அந்தளவுக்கு நிலைமை அங்கு மோசமாக உள்ளது.

பாகிஸ்தான்
ஆனால், உதவச் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. வருமானத்தை அதிகரிக்க வரி மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டது. இது மேலும் விலைவாசி உயர்வுக்கே வித்திட்டும் என்று அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கூறினாலும், நிலைமை சமாளிக்க இதுவே வழி என்பதால் வேறு வழியின்றி விலைவாசி உயர்த்தப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 20% உயர்த்தப்பட்டு அந்நாட்டு மக்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

அத்தியாவசிய பொருட்கள்
இதனால் அங்கு அனைத்து அடிப்படை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டு இருக்கிறது. பாகிஸ்தானில் இப்போது ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ சிக்கன் 780 ரூபாய்க்கும் விற்கிறது. இப்படி அனைத்து அடிப்படை பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மக்கள் மிக மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை எப்போது சீரடையும் என்றே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், நிலைமை முற்றிலுமாக சீரடைய குறைந்தது சில ஆண்டுகள் வரை ஆகும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

ரா தலைவர்
பிரதமர் நரேந்திர மோடி தான் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று அந்நாட்டு இளைஞர் ஒருவர் அழுது புலம்பும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் டிரெண்டானது. அதேபோல அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் சமீபத்தில், பாகிஸ்தான் ஏற்கனவே திவாலாகிவிட்டதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இதற்கிடையே இது தொடர்பாக இந்திய உளவு அமைப்பான ரா பிரிவின் முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலாத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்தாண்டின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

யாருக்கு முக்கியத்துவம்
இந்தியாவின் புதிய நட்பு நாடான அமெரிக்கா வெகு தொலைவில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நமது அண்டை நாடுகள் அருகில் உள்ளன என்றும் வலிமையான ஈரான்-ரஷ்யா-சீனா அச்சுறுத்தல் உருவாகும் அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார். பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், "பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் சிறந்த வாய்ப்புகள் தான்.. நமது அண்டை நாட்டுடன் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வெளிப்படையாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

பிரதமர் மோடி உதவுவார்
இன்னும் சில மாதங்களில், இந்தாண்டு இறுதியில் பிரமதர் மோடி பாகிஸ்தானுக்கு உதவுவார் என்பதே எனது கணிப்பு.. அங்கிருந்து எனக்கு வந்த உளவுத் தகவல் இல்லை. இது எனது தனிப்பட்ட கணிப்பு" என்று அவர் தெரிவித்தார். இவர் ரா பிரிவின் தலைவராக இருந்த நாட்களில் பாகிஸ்தான் நாட்டில் பல விரிவான ஊடுருவல் உளவுத்துறை நடவடிக்கைகளை நடத்தியதாக நம்பப்படுகிறது. குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, நாடு தழுவிய மின் தடைகள், அரசியல் ஸ்திரமின்மை, பாகிஸ்தான் ரூபாய் சரிவு என்று வரிசையாக அங்கு ஏற்படும் பிரச்சினைகள் அந்நாட்டை இக்கட்டான ஒரு சூழலில் தள்ளியுள்ளது.

ஒரே வழி
பாகிஸ்தானில் கடந்த ஆண்டிலும் கூட இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், அப்போது அவர்களால் இந்த பிரச்சினைகளைச் சரியாகக் கையாள முடியவில்லை. இதனால் தான் மீண்டும் மீண்டும் அங்கு இதேபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, பாகிஸ்தான் மற்ற பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு.. இந்தியாவுடன் ஓபன் வர்த்தகம் செய்யும் சூழலை உருவாக்கப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். இதுவே இப்போது பாகிஸ்தான் முன் இருக்கும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பாகிஸ்தானில் நிலவும் உள்நாட்டு அரசியலே பேச்சுவார்த்தைக்குக் கடந்த காலங்களில் தடையாக இருந்துள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

சீனா
தொடர்ந்து சீனா குறித்துப் பேசிய அமர்ஜித் சிங், "சீனா இன்னும் தனது அண்டை நாட்டுடன் நல்ல உறவை வைத்திருக்க முயல வேண்டும். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான அவ்வப்போது சந்திப்புகள் நடக்கிறது. அதேபோல இந்தியாவும் அமெரிக்கா நாடுகளும் நல்ல உறவில் உள்ளன. நாம் டிரம்பிற்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கிறோம். இது சீனாவுக்குப் பிடிக்காது.. அனைத்து தரப்புடனும் நல்ல ஒரு உறவை வைத்திருப்பதே இந்தியாவின் அணிசேரா கொள்கையின் அடிப்படையாகும். இப்போது ஈரான்- ரஷ்யா- சீனா இடையே ஒரு உறவு உருவாகி வருகிறது. அது நிச்சயம் உலக நாடுகளுக்கு ஆபத்தாகவே இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications