ரூ.88 லட்சம் சொகுசு கார்.. ரூ. 3 லட்சத்திற்கு கூட வாங்க ஆள் இல்லை! அது ஏன் தெரியுமா? ரொம்ப பாவம்தான்
டெல்லி: ரூ.88 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று வெறும் ரூ.3 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.. எப்படியாவது அந்தக் காரை வாங்கிவிடுவீர்கள் தானே.. கடந்த சில நாட்களாகவே இதுபோல பல விலை அதிகமுள்ள சொகுசு கார்கள் மிகவும் சொற்ப தொகைக்கு விற்கப்பட்டன. இது ஏன்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது தேசியத் தலைநகர் டெல்லியில் காற்று மாசு எந்தளவுக்கு உச்சத்தில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசை சமாளிக்க முடியாமல் டெல்லி திணறி வருகிறது. அதிலும் சமீப ஆண்டுகளில் நிலைமை மிக மோசமாகச் செல்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ஊழியர்களுக்கு ஒர்க் ஃபர்ம் ஹோம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

புதிய ரூல்ஸ்
இதனால் காற்று மாசை சமாளிக்க டெல்லி அரசு சமீபத்தில் புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது "எண்ட் ஆஃப் லைஃப்" என குறிப்பிடப்படும் வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டது.. அதாவது 15 வருடங்களுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 வருடங்களுக்கு மேலான டீசல் வாகனங்களை இப்படி "எண்ட் ஆஃப் லைஃப்" எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த வகை வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பத் தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், இதற்கு டெல்லியில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பு காரணமாக எரிபொருள் தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும், காற்று மாசை சமாளிக்க வேறு திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி மக்களுக்கு நிம்மதியைத் தருவதாகவே உள்ளது.
பின்வாங்கிய டெல்லி அரசு
இது தொடர்பாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், "தொழில்நுட்பச் சவால்கள் மற்றும் சிக்கலான அமைப்புகள் காரணமாக இதுபோன்ற தடையை அமல்படுத்துவது கடினம். இதற்குப் பதிலாக மிக மோசமாகப் பராமரிக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது" என்றார்.
காரணம் என்ன
டெல்லி அரசின் எரிபொருள் தடை உத்தரவு அங்குள்ள மக்களுக்குச் சிக்கலைக் கொடுத்தது. கார்கள், இரு சக்கர வாகனங்கள், லாரிகள் என மொத்தம் 62 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டன. செல்லியில் உள்ள 498 எரிபொருள் நிலையங்களிலும் கேமரா நிறுவப்பட்டன. அந்த கேமராக்கள் ஒவ்வொரு வாகனம் உள்ளே நுழையும்போதும், அந்த நம்பரை ஸ்கேன் செய்யும்.
அவை 15 வருடங்களுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் அல்லது 10 வருடங்களுக்கு மேலான டீசல் வாகனங்களாக இருந்தால் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படாது. இருப்பினும், இதை அமல்படுத்துவதில் சிக்கல் இருந்துள்ளது. நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. இதுவே திட்டத்தைக் கைவிட முக்கிய காரணம்.
சொற்ப விலைக்கு விற்பனை
இதுபோக மக்களின் கோபமும் மற்றொரு காரணம். சமீபத்தில் செகண்ட் ஹேண்டில் கார்களை வாங்கியவர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், பழங்கால கார்களை வைத்திருப்போர், கார்களை எமோஷ்னலான விஷயமாகப் பார்ப்போரும் கூட இதனால் பாதிக்கப்பட்டனர். இணையத்தில் இது குறித்து பலர் புலம்புவதைப் பார்க்க முடியும்.
மேலும், ஒருவர் சுமார் 88 லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகப் பதிவிட்டுள்ளார். அதை கூட முதலில் வாங்க ஆள் வரவில்லை என்றும் சிரமப்பட்டே விற்றதாக அவர் கூறுகிறார். அதேபோல மற்றொரு நபர் ரூ.55 லட்சத்திற்கு வாங்கிய ரேஞ்ச் ரோவர் காரை சொற்பத் தொகைக்கு விற்றதாகவும் புலம்பியிருந்தார். இதுபோல நெட்டிசன்கள் பலரும் டெல்லி அரசின் முடிவால் கோபமடைந்தனர். இதன் காரணமாகவே வேறு வழியின்றி டெல்லி அரசு இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications