வழிக்கு வந்த டிரம்ப்.. இந்தியா இல்லைன்னா இந்த விஷயங்களில் அமெரிக்கா திணறி விடும்!
டெல்லி: வரி பஞ்சாயத்துக்கள் இந்தியா-அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மோடி எனக்கு சிறந்த நண்பர் என திடீரென டிரம்ப் உருட்டியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன? ஏன் திடீரென இந்தியாவுடன் நட்பு ரீதியாக இறங்கி வர வேண்டும்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்தியாவுக்கு அமெரிக்காவின் பழக்கம் எப்படி ரொம்ப முக்கியமோ, அதே மாதிரி அமெரிக்காவுக்கும் நாம் தேவை. வர்த்தகம் மட்டுமல்லாது, ராஜதந்திர ரீதியிலும் இந்தியாவின் தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது.

வர்த்தக ரீதியான தேவை
அமெரிக்காவின் ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதியில் இந்தியா மிகப்பெரிய அளவுக்கு பங்கு வகிக்கிறது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் ஜவுளிகளில் நான்கு முதல் ஆறு சதவீதம் இந்தியாவிலிருந்து தான் செல்கின்றன. குறிப்பாக பருத்தி மற்றும் ஆயத்த ஆடைகள் அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்தியா தவிர சீனா, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் ஜவுளிகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இருப்பினும் இந்திய ஜவுளிக்கு என அமெரிக்காவில் தனி மதிப்பு இருப்பதால், இந்த துறையில் அமெரிக்காவுக்கு நிச்சயம் இந்தியா தேவை.
மனித வளம்
அதே போல மனித வளம் மற்றும் அறிவுத் தளம் துறையில் இந்தியா அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கூட்டாளியாக இருக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விஷயங்களில் மிக அதிக அளவில் ஏற்றுமதி ஆவது அறிவுத்துறை சார்ந்த ஆட்கள்தான். அதாவது நம்ம ஊரில் கல்வி பயின்று அமெரிக்காவில் சென்று வேலை செய்வதற்கு ஏராளமான இளைஞர்கள் விரும்புகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் இன்றைக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை சீராக இயங்கி வருகிறது எனில் அதற்கு காரணம் இந்திய பணியாளர்கள் தான்.
இந்திய பணியாளர்கள்
இந்திய பணியாளர்களை தவிர்த்து, வேறு நாடுகளில் இருந்து ஆட்களை அமெரிக்காவால் இறக்குமதி செய்ய முடியும். அல்லது சொந்த நாட்டு மக்களையே ஐடி துறைக்கு பயன்படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் காஸ்ட்லியான வேலை. இந்திய பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் அடிப்படை ஊதியம் ஆகும். அதுவே அமெரிக்கா தனது சொந்த நாட்டு மக்களை ஐடி துறைக்கு பயன்படுத்துகிறது எனில், அதற்கு அதிக அளவு ஊதியம் வழங்க வேண்டியதிருக்கும். தவிர ஏராளமான சலுகைகளும், தொழிலாளர் உரிமைகளையும் கட்டாயமாக வழங்க வேண்டியதிருக்கும். இதெல்லாம் செலவு பிடித்த வேலை. எனவேதான் இந்திய ஐடி பணியாளர்களை அமெரிக்கா அதிக அளவுக்கு நம்புகிறது.
ராஜதந்திர விஷயம்
அமெரிக்காவுக்கு இந்தியா ஏன் தேவை என்கிற விஷயத்தில், மூன்றாவதாக மிகப்பெரிய காரணம், ராஜதந்திர விவகாரம்தான். ஆசியாவில் தனது இருப்பை பலமாக்கிக் கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியா தேவை. குறிப்பாக சீனா வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும், சீனாவுடன் சேர்ந்து மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்புவதை தடுக்கவும் இந்தியாவை அமெரிக்கா மிகப்பெரிய அளவில் நம்புகிறது. இந்த காரணத்தால் தான் இந்தியாவுடன் அமெரிக்கா நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருகிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் பிரதமர் மோடி எனது நண்பர் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். அவ்வளவு வரி போட்டாச்சு, இஷ்டத்துக்கு இந்தியாவை ஓரம் கட்டியாச்சு, இப்போது வந்த மோடி என் நண்பர் என்று டிரம்ப் சொல்வதற்கு காரணம், நாம் சீனாவுடன் சேர்ந்துவிடக்கூடாது என்பதால்தான் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications