அம்புடன் ஹார்ட் வரைந்து ஒரே விளையாட்டு! காங்.,தலைவர் தேர்தலில் 416 ஓட்டுக்கள் செல்லாமல் போனது ஏன்?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்ற நிலையில் 416 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஓட்டுச்சீட்டில் அம்புடன் ஹார்ட் வரைந்து விளையாடியது உள்ளிட்ட பின்னணியில் உள்ள விபரங்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி அக்டோபர் 17 ல் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான மனுத்தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டது.

கார்கே -சசிதரூர் போட்டி
இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் போட்டியிடவில்லை. சோனியா காந்தியின் ஆதரவுடன் மாநிலங்களவை எம்பியான மல்லிகார்ஜூன கார்கே களமிறங்கினார். அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவர்கள் 2 பேரும் இந்தியா முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் ஆதரவு கோரினார்.

கார்கே வெற்றி
அதன்பின் அக்டோபர் 17 ல் தேர்தல் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட மொத்தம் 9900 பேர் ஓட்டளித்தனர். இதில் பதிவான ஓட்டுக்கள் அக்டோபர் 19 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சோனியா காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளரான மல்லிகார்ஜூன் கார்கே வெற்றி பெற்றார். சசீதரூர் தோல்வியடைந்தார்.

செல்லாமல் போன 416 ஓட்டுக்கள்
இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் வெறும் 1,072 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 416 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி தேர்தலில் செல்லாத ஓட்டுக்களாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள சில விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

காரணம் என்ன?
அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் ராகுல் காந்தியை தலைவராக்க விரும்பினார். ஆனால் அவர் தேர்தலில் நிற்காததால் ஓட்டுச்சீட்டில் பலர் அவரது பெயரை எழுதி போட்டுள்ளனர். மேலும் ஒருவர் சசிதரூரின் பெயர் அருகே இதயம் வரைந்து அம்புவிட்டு அதீத அன்பை காட்டியுள்ளார். மேலும் ஸ்வாஸ்திகா முத்திரையை வரைந்து சிலர் இந்து நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் தான் அந்த 416 ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிதரூர் அணி உற்சாகம்
இந்த தேர்தலில் சசிதரூர் தோல்வியடைந்தாலும் கூட அவர் 12 சதவீத ஓட்டுக்களை பெற்றார். இதனை அவர்கள் வெற்றிகரமான தோல்வியாக பார்க்கின்றனர். ஏனென்றால் கடந்த 1997, 2000ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 2ம் இடம் பிடித்த வேட்பாளர்களை விட சசிதரூர் பெற்ற ஓட்டுக்கள் என்பவை அதிகமாகும். இதனால் சசிதரூர் அணியினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் தற்போதைய தேர்தலில் சசிதரூருக்கு உத்தர பிரதேசம், குஜராத், காஷ்மீர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகமானவர்கள் ஓட்டளித்துள்ளதாக அவரது அணியினர் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications