ஹிஜாப்பை அகற்றினால் கையை வெட்டுவோம்.. சமாஜ்வாதி கட்சி பெண் பிரமுகர் பேச்சால் உ.பி.யில் சர்ச்சை
டெல்லி: ‛‛ஹிஜாப்பை அகற்றும் கைகளை வெட்டுவோம்'' என உத்தர பிரதேச சமாஜ்வாடி கட்சியின் பெண் பிரமுகர் ஒருவர் சர்ச்சையாக பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலதுசாரிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. மேலும் ஹிஜாப்புக்கு போட்டியாக இந்துத்துவா மாணவர்கள் காவிஷால் அணிந்து கல்லூரி சென்றனர். இதனால் போராட்டம் வெடித்தது. சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.

அத்துடன் கர்நாடக அரசும், கல்லூரிகளில் யூனிபார்ம் மட்டுமே அணிய உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஹிஜாப் தடையை நீக்ககோரும் வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோரின் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை பிப்.,14ல் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே நேற்று உத்தர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவிகள் கர்நாடகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அலிகார் நகரின் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் ரூபினா கானம் ஆக்ரோஷமாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது:
‛‛இந்தியாவின் மகள்கள், சகோதரிகளின் கண்ணியத்துடன் விளையாடுகிறீர்கள். ஹிஜாப் அகற்ற முயலும் நபரின் கையை ஜான்சிராணி, ராசியா சுல்தானாவாக மாறி வெட்ட அதிக நேரம் ஆகாது. ஹிஜாப் அகற்றும் கைகளை வெட்டுவோம். இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. இதனால் நெற்றியில் திலகம், தலையில் டர்பன், ஹிஜாப் உள்ளதா என்பதை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்திய கலாசாரம், மரபுகளோடு ஒருங்கிணைந்தது தான் ஹிஜாப். இதை சர்ச்சையாக்கி, அரசியலாக்குவது தவறான செயல். மாநிலங்களில் எந்த கட்சி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம். ஆனால் பெண்களை பலவீனமாக நினைக்க கூடாது'' என்றார். இவர் பேசும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications