கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் மூலம் வைரஸ் பரவுமா? புதிய ஆய்வில் எய்ம்ஸ் வல்லுநர்கள் கூறுவது என்ன
டெல்லி: கொரோனாவால் உயிரிழக்கும் நோயாளிகளின் உடல்களின் மூலம் வைரஸ் பரவுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு நாம் தடுப்பூசிகளைக் கண்டறிந்துவிட்டாலும், கொரோனா வைரஸ் பற்றி நாம் இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.
இதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

உயிரிழந்தவர்கள் மூலம் பரவுமா?
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா என்பது தான் பெரும்பாலான மக்களுக்குச் சந்தேகமாக உள்ளது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் அளிக்காமல் மாநகராட்சிகளே எரியூட்டுவதும் இந்த சந்தேகத்தை வலுவூட்டும் வகையில் அமைகிறது. இதன் காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரியூட்ட அனுமதிக்காமல் பல கிராமங்களில் போராட்டங்களும் நடைபெறுகிறது.

12 முதல் 24 மணி நேரம்
இந்நிலையில் இது குறித்து எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட முக்கிய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களின் நாசி மற்றும் வாய் பகுதிகளில் அதிகபட்சமாக 12 முதல் 24 மணிநேரம் மட்டுமே கொரோனா வைரஸ் ஆக்டிவாக இருக்கும். இதனால், உயிரிழந்த உடல்கள் மூலம் கொரோனா பரவும் ஆபத்து குறைவு என எய்ம்ஸ் தடயவியல் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா தெரிவித்தார்.

ஆய்வு முடிவுகள்
இது குறித்து சுதிர் குப்தா மேலும் கூறுகையில், "இதற்காக கொரோனாவால் உயிரிழந்த 100 உடல்களில் 12 முதல் 24 மணி நேர இடைவெளியில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என்றே முடிவுகள் வந்தன. அதாவது கொரோனாவால் உயிரிழந்த உடல்களின் மூலம் வைரஸ் பரவலின் வாய்ப்பு மிகக் குறைவு" எனத் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதேநேரம் உயிரிழந்தவர்களின் நாசி மற்றும் வாய்வழியே திரவங்கள் வெளியே வராமல் இருக்கத் துணிகளைக் கொண்டு அடைக்க வேண்டும். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாளும் அனைவரும் மாஸ்க்குகள், கையுறைகள் மற்றும் பிபிஇ கருவிகள் அணிந்திருக்க வேண்டும் என்றும் சுதிர் குப்தா குறிப்பிட்டார்.

அஸ்தி
மேலும், உயிரிழந்தவர்களை எரியூட்டிய பின்னர், அவர்களின் அஸ்தியைச் சேகரிப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதன் மூலம் கொரோனா பரவல் ஏற்படக் கண்டிப்பாக வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் மக்களிடையே நீண்ட காலமாக இருந்த சந்தேகங்களுக்குக் கடைசியாக ஒரு தெளிவான விடை கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications