கர்நாடகா முடிவு 2024ல் எதிரொலிக்குமா? ராஜஸ்தானில் நடந்தது ஞாபகம் இருக்கா? எக்ஸ்பர்ட்ஸ் சொல்வது என்ன?
டெல்லி : கர்நாடகா தேர்தல் முடிவு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும், பாஜகவுக்கு இனி சரிவுதான் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறி வரும் நிலையில், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி மறுக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கும் நிலையில், கர்நாடகாவில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது அக்கட்சியின் அஸ்தமனத்திற்கான தொடக்கம் என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்த ஒரே மாநிலமான கர்நாடகாவிலும் பாஜக துடைத்து எறியப்பட்டிருப்பதால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிந்தியாவில் பாஜக சறுக்கலைச் சந்திக்கக்கூடும், கர்நாடகா தேர்தல் முடிவு 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் எழுந்துள்ள பாஜகவுக்கு எதிரான இந்த அலை நாடு முழுவதும் பரவும், 2024ல் பாஜக ஆட்சி அகற்றப்படும் எனச் சூளுரைத்து வருகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், பல மாநிலங்களிலும், வாக்காளர்களின் கணக்குகள் வேறு மாதிரியாகவே இருந்திருக்கின்றன.
மத்தியில் ஆள்வது யார், மாநிலத்தில் ஆள்வது யார் என்பதில் ஒரே சமயத்தில் இருவேறு முடிவுகளை வாக்காளர்கள் எடுத்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் இருப்பதால், கர்நாடகா தேர்தல் முடிவுகள் முழுமையாக எதிரொலிக்கும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
உதாரணமாக, கடந்த 2018 டிசம்பரில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 200 இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்து ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்கு முன்னர் 163 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பாஜக 73 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

ஆனால், அதற்கு அடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 லோக்சபா சீட்களில் 24-ஐ கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதையே, இப்போதைய சூழலுக்கும் எடுத்துக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ராஜஸ்தானில் வெறும் 4 மாத இடைவெளிகளில் நடைபெற்ற தேர்தல்களுக்கு இடையிலேயே மக்களின் தேர்வுகளில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும்போது, இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் நிலையில், இந்த முடிவு அப்போதைக்கு எதிரொலிக்கும் என எதிர்பார்க்க முடியாது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications