டெல்லியின் புதிய முதல்வராகிறாரா கெஜ்ரிவாலை தோற்கடித்த மாஜி முதல்வர் மகன் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா?
டெல்லி: டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் பாஜகவின் முதல்வர் யார் என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியின் புதிய முதல்வராக யாருக்கு எல்லாம் வாய்ப்பு அதிகம் என்கிற பட்டியலில் பெரும்பாலானோர் கைகள் நீள்வது முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவை நோக்கிதான். புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்தவர்தான் இந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா.
1956-ல் டெல்லி, யூனியன் பிரதேசமாக்கப்பட்டு முதல்வர் பதவி இல்லாமல் துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இதன் பின்னர் 1993-ம் ஆண்டுதான் டெல்லியில் மீண்டும் முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது.

1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை டெல்லி பாஜக அரசின் முதல்வராக மதன்லால் குரானா பதவி வகித்தார்; அவரைத் தொடர்ந்து 1996 முதல் 1998-ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தவர் சாஹிப் சிங் வர்மா. இவரைத் தொடர்ந்து 42 நாட்கள் டெல்லி முதல்வராக இருந்தார் சுஷ்மா ஸ்வராஜ். அதன் பின்னர் டெல்லியில் 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி, முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி, ஜனாதிபதி ஆட்சி, மீண்டும் 10 ஆண்டுகள் ஆம் ஆத்மி ஆட்சி என்பதாகவே காலங்கள் கடந்தன.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பாஜக மீண்டும் வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து டெல்லியின் புதிய முதல்வர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதங்களிலும் சரி.. முதல்வர் பதவி யாருக்கு என்பதான உத்தேசப் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருப்பது பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா. 47 வயதாகும் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, பாஜகவின் முன்னாள் முதல்வராக சாஹிப் சிங் வர்மாவின் மகன்; 2 முறை எம்.பி, ஒரு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர்.
இந்த முறை புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டார். இத்தொகுதியில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா 30,088 வாக்குகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் 25,999 வாக்குகளையும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் 4,568 வாக்குகளையும் பெற்றனர். காங்கிரஸின் வேட்பாளர் சந்தீப் தீட்சித்தும் முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித் மகன்தான். அரவிந்த் கெஜ்ரிவாலை 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா.
பொதுவாக டெல்லியின் முதல்வர்கள் புதுடெல்லி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்களாகவே இருந்துள்ளனர்; இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவின் பெயர், இயல்பாகவே முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்னரே தமது தொகுதியில் பெண்களுக்கு வாக்குக்கு பணம் கொடுத்த சர்ச்சையில் சிக்கியவர் பர்வேஷ்; ஆனால் பெண் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தோம்; என் தந்தையின் பெயரிலான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணம்தான் அது என பகிரங்கமாகவும் சொன்னவர்தான் பர்வேஷ். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆடம்பர மாளிகை செட்டை தமது வீட்டு முன்பாக வைத்து பெரும் கவனம் ஈர்த்தவர் பர்வேஷ். இதனால் பாஜக, பர்வேஷ் சாஹிப் சிங் வர்மாவையே டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கும் என்பது அரசியல் பார்வயாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications