சரிந்து வரும் வாக்கு சதவீதம்.. அமேதி தொகுதி ராகுலுக்கு அமைதியை தருமா?
டெல்லி: அமேதி தொகுதி ராகுல் காந்திக்கு பெரிய வெற்றியைத் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குஜராத் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடவுள்ள 15 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கியுள்ளன. இதில் ரே பரேலி தொகுதியில் சோனியாகாந்தியும் அமேதி தொகுதியில் ராகுலும் போட்டியிட உள்ளனர்.

இதில் அமேதி தொகுதி ராகுலுக்கு பெருவெற்றியை கொடுக்குமா என்ற கேள்வி இப்போது எழுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் தொகுதியாக விளங்கி வருகிறது. ஆனால் கடந்த 1998 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சதீஸ் சர்மா பாஜக வேட்பாளர் சஞ்சய் சிங்கிடம் தோற்றுப் போனார்.
அதன் பிறகு1999 -ம் ஆண்டு இந்த தொகுதியில் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு இந்த தொகுதி மீண்டும் காங்கிரசின் வசம் வந்தது. இன்று வரை காங்கிரஸ் கையிலேயே உள்ளது. 1994 ம் ஆண்டு அரசியலுக்கு வந்த ராகுல் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவர் இங்கு போட்டியிட்டதால் சோனியாகாந்தி ரே பரேலி தொகுதிக்கு இடம் மாறினார்.
ஆனால் அடுத்து வந்த தேர்தல்களில் ராகுலுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வந்தது. 1994 -ம் ஆண்டு போட்டியிட்டபோது 71 % வாக்குகளை பெற்ற ராகுல் 2009- ம் ஆண்டு மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் 66% வாக்குகளையே பெற்றார். அதன் பின்னர் 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெறும் 46%வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைத்தன. இருந்தாலும் வெற்றி பெற்றார்.
இந்த நேரத்தில் பாஜவின் வாக்கு சதவீதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஒரு இலக்கத்தில் இருந்த பாஜக கடந்த 2014 தேர்தலில் 37% சதவீதம் பெற்று கவனம் ஈர்த்தது. அதற்கு ஒரு காரணம் அப்போது வளர்ச்சி நாயகன் மோடி என்று கட்டி எழுப்பப்பட்டிருந்த பிம்பம், காங்கிரஸ் மீதான ஊழல் குற்றசாட்டுகள் என்று பல்வேறு காரணங்கள் இருந்தன. 2014 ம் ஆண்டு ராகுலை எதிர்த்து இப்போதைய மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஸ்ம்ரிதி அங்கு போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தாலும் ராகுலை வெற்றி பெற விடக்கூடாது என்பதில் பாஜக தற்போது அந்த தொகுதிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனம் செலுத்தி வருகிறது.
2017 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட அமேதி தொகுதிக்குட்பட்ட 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 4 தொகுதிகள் பாஜகவுக்கும் ஒரு தொகுதி சமாஜ்வாடி கட்சிக்கும் சென்றது. இதில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த ஆண்டுகளில் ராகுல் தொகுதி பக்கம் செல்லவில்லை என்ற குற்றசாட்டும் அவர் மீது உள்ளது. அமேதி தொகுதி விவசாயிகள் ராகுலை சந்திக்க நேரம் கேட்டிருந்தும் அவர் தொகுதிக்கு செல்லாமல் தொகுதி மக்களை லக்னோவிற்கு வர சொல்லியே சந்தித்தார்.
இந்த குற்றசாட்டு இப்போது இருந்தாலும் இதற்கு முன்னர் நடந்த தேர்தல் கூட அவருக்கு அவ்வளவு சாதகமான தேர்தலாக இருக்கவில்லை. 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 1.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றார். இப்போது தேர்தல் களத்தின் நிலைமை மாறியிருக்கிறது. 2014 ம் ஆண்டு பாஜக பெற்ற பெருவெற்றிக்குப் பிறகு மக்களவைக்கு நடைபெற்ற இடைதேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. உ.பி யில் 2017 ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு இரண்டு வருடங்களுக்குள்ளாகவே பாஜக யோகி அரசு மீது உ.பி மக்கள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லிம்கள் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.
உ.பி. மாநிலத்தின் இரு பெரும் கட்சிகளான சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்துள்ளன இருந்தாலும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் இந்த இரு கட்சிகளும் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டன. அதோடு பிரியங்கா காந்தியும் உ.பி மாநிலத்தில் தேர்தல் பணியாற்றி வருகிறார். இவர் இங்கு தேர்தல் பணி செய்ய ஆரம்பித்ததில் இருந்து இவருக்கு இங்கு ஆதரவு பெருகி வருகிறது. பிரியங்கா சேனா என்று ஒரு படையும் உ.பி யில் இப்போது வேகமாக தேர்தல் பணி செய்து வருகிறது ஆகவே இவையனைத்தும் ராகுலுக்கு பிளஸ் என்றாலும் பாஜக சார்பில் ஸ்ம்ரிதி இங்கு களம் இறங்கும் சூழலில் ராகுல் மிகக் கடுமையாக உழைத்தால் மட்டுமே ராகுலுக்கு இங்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும் என்பதே இப்போதைய கள எதார்த்தம். செய்வாரா ராகுல்?












Click it and Unblock the Notifications