வானில் திடீர் மாற்றம்.. நிலவுக்கு துணையாக "மினி மூன்.." அப்போ 2 நிலா தெரியுமா.. இஸ்ரோ தந்த விளக்கம்
டெல்லி: இந்த மாதம் இறுதி தொடங்கி சுமார் 2 மாதங்களுக்குப் பூமியைச் சுற்றி மினி மூன் தெரிய உள்ளது.. அப்போ அடுத்த 2 மாதம் பூமியில் 2 நிலவு தெரியுமா என்று பலருக்கும் சந்தேகம் வரும். இதற்கான பதிலை இஸ்ரோ ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது வானில் பல்வேறு அதிசயங்கள் நடக்கும். நாம் கனவிலும் எதிர்பார்க்காத மாற்றங்கள் விண்வெளியில் தொடர்ச்சியாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு அரிய நிகழ்வு தான் இப்போது வானில் நடக்கிறது.

பூமியைச் சுற்றும் நிலவு: அடுத்த 2 மாதங்களுக்கு நிலவுடன் சேர்ந்து மற்றொரு மினி மூன் பூமியைச் சுற்ற உள்ளது.. அதாவது வரும் செப். 29ம் தேதி முதல் நவ. 25 வரை நிலாவுடன் ஒரு புதிய துணைக்கோள் பயணிக்க உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இந்த தற்காலிக மினி மூன் சுமார் 53 நாட்கள் நமது கிரகத்தைச் சுற்றி வருமாம். அப்போ பூமியில் இருந்து பார்த்தால் 2 நிலவு தெரியுமா என்ற சந்தேகம் பலருக்கும் வரும். இதற்கிடையே இதற்கான பதிலை இஸ்ரோவின் டாக்டர் ஏ.கே. அனில் குமார் விளக்கியுள்ளார்.
இஸ்ரோ சொன்ன மேஜர் தகவல்: அதாவது வானில் தெரியும் இந்த 2வது மினி மூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்று டாக்டர் ஏ.கே. அனில் குமார் தெரிவித்துள்ளார். ஏனென்றால் 2024 PT5 என்று அழைக்கப்படும் மினி மூன் வெறும் 10 மீட்டர் மட்டுமே விட்டம் கொண்டது. அதாவது உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இது 3,476 கிலோமீட்டர் விட்டம் கொண்ட வழக்கமான நிலவை விட 350,000 மடங்கு சிறியதாகும். இதன் காரணமாகவே வெறும் கண்களால் மினி மூனை பார்க்க முடியாது.

இந்த மினி மூனின் பாதையை இஸ்ரோ கண்காணித்து வருகிறது. மேலும், இந்த சிறுகோள் பூமியுடன் மோதாது என்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. வரும் செப். 29ம் தேதி முதல் நவம்பர் 25ஆம் தேதி வரை சுமார் இரண்டு மாதங்கள் பூமியை இந்த மினி மூன் சுற்றி வரும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பூமிக்கு இன்னொரு லிட்டில் மூன்! நாசா விஞ்ஞானிகள் சொன்ன சூப்பர் தகவல்.. வானியல் அதிசயம்!
எப்போது கண்டுபிடிக்கப்பட்டது: பூமிக்கு அருகே வரும் பொருட்களைக் கண்காணிக்க நாசா உருவாக்கிய அட்லாஸ் என்ற அமைப்பு தான் இந்த மினி மூனை முதலில் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி கண்டுபிடித்தது. தொடர்ந்து இதைக் கண்காணித்ததில் தான் இது பூமியைச் சுற்றி வரப் போவதும் தெரிய வந்தது. இந்த மினி மூனுக்கு இந்து புராணமான மகாபாரதத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். குறிப்பாக அர்ஜுனனுக்கும் இந்த சிறுகோளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அதேநேரம் நமது பூமியை இதுபோன்ற மினி மூன் சுற்றி வருவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களில் 3 முறை இதுபோன்ற சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டில் இது போன்ற சம்பவம் முதலில் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2013 மற்றும் 2018 ஆண்டுகளிலும் இதுபோல மினி மூன் நமது பூமியைச் சுற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications