எஸ்ஐஆருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.. திருச்சி சிவா
டெல்லி: தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை தேவையில்லாதது எனவும், SIR-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் திருச்சி சிவா எம்பி கூறியுள்ளார். இதேபோன்று தமிழ்நாட்டுக்காக கல்வி நிதியை வழங்கக் கோரி வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி ஒருமுறை கூட வருவதில்லை. வழக்கம்போல் ராஜ்நாத் சிங் வருகிறார், கிளம்பிவிடுகிறார் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன, நடைபெறும் நாட்கள் குறைகின்றன எனவும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

19 நாட்கள் மட்டுமே நடக்கிறது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருச்சி சிவா, டி ஆர் பாலு எம்பிக்கள் பங்கேற்றனர். இதன் பிறகு திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக வெறும் 19 நாட்கள் மட்டுமே இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு குறைந்தது 75 நாட்களாவது நடைபெற வேண்டும். 100 நாட்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அது நாளாக.. நாளாக குறைந்துவிடுகிறது.
நம்பிக்கை இல்லை
இந்த அரசுக்கு நாடாளுமன்ற விவாதங்கள் மீதும், நடைமுறைகள் மீது நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்று. இந்த 19 நாட்களில் கூட 4 நாட்கள் சனி, ஞாயிறுகளில் போய்விடுகிறது. மீதி 15 நாட்கள் இருக்கிறது. இதில் வெள்ளிக்கிழமைகளில் தனிநபர் தீர்மானம், மசோதா தாக்கல் செய்ய முடியாது.
மீதி 12 நாட்களில் அரசின் சார்பில் 13 மசோதாக்களையும், இன்னொரு நிதி சார்ந்த பில்லையும் கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளையும் அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். இதை எல்லாம் பேச நேரம் ஒதுக்குங்கள். கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எல்லாம் வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டால் கூட சரி என்று சொல்கிறார்கள். ஆனால் தரமாட்டேன்கிறார்கள்.
SIR-க்கு எதிராக குரல் எழுப்புவோம்
பிரதமர் மோடி கூட ஒருமுறை கூட அனைத்து கட்சி கூட்டத்திற்கு வருவதில்லை. வழக்கம் போல் ராஜ்நாத் சிங் வருகிறார். அவரிடம் நாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்கிறார்கள். அவையிலும் பேச முடியவில்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. நாடாளுமன்ற நடைமுறைகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன, நடைபெறும் நாட்கள் குறைகின்றன.
தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை தேவையில்லாதது எனவும், SIR-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். இதேபோன்று தமிழ்நாட்டுக்காக கல்வி நிதியை வழங்கக் கோரி வலியுறுத்துவோம்.. தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கிறோம். தீர்வு இல்லை. எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால் இதற்கு ஜனநாயக நாடு என பெயர். இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.












Click it and Unblock the Notifications