‛‛ஆக்ரோஷமான கெஜ்ரிவால்’’.. ஆதரவாக வந்த பாக். மாஜி அமைச்சருக்கு ‛நோஸ்கட்’.. Xல் கடும் மோதல்
டெல்லி: டெல்லியில் இன்று லோக்சபா தேர்தல் நடந்தது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் ஓட்டளித்த போட்டோவை வெளியிட்ட நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாவத் உசேன் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்து ‛நோஸ்கட்' செய்த நிலையில் எக்ஸ் வலைதளத்தில் மோதல் உருவானது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியில் மொத்தம் 7 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் என்பது நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டளித்தார். அவர் தனது குடும்பத்துடன் சென்று வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
அதன்பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்துடன் போட்டோ எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‛‛எனது தந்தை, மனைவி, குழந்தைகளுடன் நான் இன்று ஓட்டளித்தேன். எனத தாய்க்கு உடல்நலம் சரியில்லை. இதனால் அவர் வரவில்லை. இன்று நான் சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக ஓட்டளித்தேன். நீங்களும் கண்டிப்பாக ஓட்டளிக்க செல்லுங்கள்'' என தெரிவித்து இருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த எக்ஸ் வலைதள பதிவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பாவத் உசேன் ரீப்ளே செய்தார். அதில், ‛‛அமைதியும், நல்லிணக்கமும் சேர்ந்து இந்த தேர்தலில் வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்க்கடிக்கட்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இதனை கவனித்த அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக பாகிஸ்தான் அமைச்சர் பாவத் உசேனுக்கு பதிலளித்தார். ‛‛சவுத்ரி சாஹிப், நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்சினைகளை கையாளும் திறன் கொண்டவர்கள். உங்கள் ட்வீட் தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் தேர்தல் என்பது இந்தியாவின் உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை நாடு பொறுத்து கொள்ளாது'' என விளாசினார்.
இதையடுத்து பாவத் உசேனும் விடவில்லை. உடனடியாக, ‛‛முதல்வர் சாஹிப், உண்மையில் தேர்தல் என்பது உங்களின் சொந்த பிரச்சினை. ஆனால் தீவிரவாதம் என்பது பாகிஸ்தானாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் கூட அது எல்லை கடந்த பிரச்சனையாகும். மேலும் அது இந்தியா அல்லது பாகிஸ்தான் என அனைவருக்கும் ஆபத்தானது. எனவே மனசாட்சி உள்ள அனைவரும் தீவிரவாதத்துக்கு பயப்பட வேண்டும். அதோடு தனிநபர்களாக நாம் எங்கிருந்தாலும் சிறந்த சமுதாயத்திற்காக பாடுபட வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
மேலும் இன்னொரு பதிவில், ‛‛பாகிஸ்தானைத் தாக்கிப்பேசாமல் இந்தியாவில் அரசியல் பேச்சுகள் முழுமையடையாத நிலை உள்ளது. அதேவேளையில் உள்நாட்டு அரசியலை பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை. இது ஏன்? என்றால் பாகிஸ்தான் இந்தியாவில் முஸ்லிம் முக்கியத்துவத்துவம் அளிக்க விரும்புவதும், முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்த பாஜக பாகிஸ்தானைப் பயன்படுத்துவதே காரணமாக இருக்கலாம்'' என தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ இந்த பதிவை சுட்டிக்காட்டி, ‛‛ராகுல் காந்தி மட்டுமல்ல அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கூட பாகிஸ்தானில் இருந்து ஆதரவு உள்ளது. ஆனாலும் இந்தியா மீண்டும் ஒருமுறை நரேந்திர மோடியை மெஜாரிட்டியுடன் பிரதமராக தேர்வு செய்ய உள்ளது. இப்போது இந்தியாவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'' என தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications