Exclusive கென்யாவில் என்ன நடக்கிறது? 27 பேர் பலி.. ஒன் இந்தியாவுக்கு கென்ய ஊடகவியலாளர் பேட்டி!
டெல்லி: கென்யாவில் 27 பேர் பலியாகி பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கென்யாவின் முன்னணி செய்தி ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் "ஒன் இந்தியா"வுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரியை உயர்த்த வழிவகை செய்யும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து கென்யா நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாராளுமன்ற வளாகத்தில் நுழைந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் மேற்கொள்ள முயன்றனர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனால் பெரும் வன்முறை வெடித்தது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதால் கென்யாவில் பதற்றம் நிலவி வருகிறது.
வரி உயர்வு தொடர்பான மசோதா காரணமாக கென்யா முழுவதும் மக்கள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் '7 டேஸ் ஆஃப் ரேஜ்' என போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து, கென்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரி உயர்வு மசோதா திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். எனினும், போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை.
நிதி மசோதாவை வாபஸ் பெறும் முடிவை கென்ய அதிபர் ரூட்டோ அறிவித்தபோதும், கென்ய போராட்டக்காரர்கள் 10 லட்சம் பேர் பேரணியாக செல்வது என்ற முடிவுடன் உள்ளனர். கென்ய தலைநகர் நைரோபியை நோக்கி நாம் செல்வோம் என்ற போஸ்டர்கள் சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கென்யா தலைநகர் நைரோபி பதற்றத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. பாதுகாப்புப் படையினர் பொதுமக்கள் போராட்டக்காரர்களை எதிர்கொள்கின்றனர். கென்யாவில் நிலைமை தீவிரமடைந்துள்ளது.
கென்யாவில் பதற்றமான நிலை இருந்து வரும் நிலையில், நமது ஒன்இந்தியாவின் அன்ஷ் பாண்டே, கென்யா டைம்ஸின் தலைமை ஆசிரியர் கென் அசகாவிடம் இது தொடர்பாக பிரத்யேக நேர்காணல் நடத்தி உள்ளார்.
கென்யாவில் இளைஞர்கள் தெருக்களில் போராட்டம் நடத்துவதால் ஏற்படும் அரசியல் தாக்கங்கள் மற்றும் இந்த பதற்றமான சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்த தனது பார்வையை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கென்யாவின் வன்முறைப் போராட்டங்களுக்கு உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்று கென் அசேகாவிடம் நமது செய்தியாளர் கேட்டதற்கு, "உலக ஊடகங்களில் பெரும்பாலானவை இங்கு என்ன நடக்கிறது என்பதை மேலோட்டமாகவே கவர் செய்துள்ளன.
ஆனால், ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டால் பலியான போராட்டக்காரர்களின் எண்ணிக்கையைப் பற்றி செய்திகளை சேகரிப்பதில் உலக ஊடகங்கள் தவறிவிட்டன. இந்த அமைதியின்மைக்கான அடிப்படைக் காரணத்தையும், அதில் ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் பங்கையும் பற்றி விளக்கத் தவறிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications