விடாது துரத்தும் ரஃபேல் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சீராய்வு மனு
டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், எந்த தவறும் நடைபெறவில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள், யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ததில், பெரும் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிறப்பு விசாரணை குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து, உச்சநீதிமன்றத்தில், யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், ரஃபேல் போர் விமானம் வாங்கப்பட்ட எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், மத்திய அரசு சீலிட்ட கவரில் வழங்கிய தவறான தகவல்கள் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே, வெளிப்படையாக ஓபன் கோர்ட்டில் வைத்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்று தங்கள் மனுவில் அவர்கள் கோரியுள்ளனர்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அளித்த சிறப்பு பேட்டியில் ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications