நாயை தொடுவீர்கள்.. மனிதர்களை தொட மாட்டீர்களா? சாவர்க்கர், ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்
டெல்லி: நாயையும், குதிரையையும் தொடும் மனிதர்கள், சக மனிதர்களிடம் தீண்டாமையை கடைப்பிடிப்பது ஏன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.
ஜவஹர் பவனில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ராஜுவின் கட்டுரைத் தொகுப்பான "The Dalit Truth" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவில் தலித்துகளுக்கு எதிராக அரங்கேறும் தீண்டாமை கொடுமைகள் குறித்து உருக்கமாக பேசினார்.
நம் இந்தியாவில் குறிப்பிட்ட மக்களை தீண்டத்தகாதவர்களாக வைத்து இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.

ராகுல் காந்தி வேதனை
தொடர்ந்து பேசிய அவர், "மனிதர்கள் சிலருக்கு சக மனிதர்களை பிடிக்காது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு நாயை தொடும் மனிதர்கள், பூச்சியை கையால் அடித்துக் கொல்லும் மனிதர்கள், குதிரையை தொடும் மனிதர்கள், சக மனிதர்களை தொடக்கூட மறுக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

இந்தியாவில் மட்டுமே இந்த அவலம்
இந்த தீண்டாமை குறித்து நான் புரிந்துகொள்ள முயன்றபோதுதான் தெரிந்தது, உலகிலேயே தீண்டாமையை கடைபிடிக்கும் ஒரே நாடு இந்தியா என்று. நான் எனது கொள்ளுத் தாத்தா ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தை படித்து, இந்த தீண்டாமை பிரச்சனை குறித்து அறிந்துகொள்ள முயன்றேன்.

சாவர்க்கருக்கு மரியாதை கொடுக்க விரும்பவில்லை
இந்த காலத்திலும் இந்நிலை ஏன் நீடிக்கிறது என்ற கேள்விகு என்னால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், முன்பை விட தற்போதைய சூழல் மாறி இருப்பதை என்னால் உணர முடிகிறது. சாவர்க்கர் ஜி, தான் எழுதிய புத்தகத்தில் 'எனது நண்பர்களுடன் சேர்ந்து சென்று இஸ்லாமியர்களை தாக்கும் தினமே எனக்கு மகிழ்ச்சியான நாள்' என குறிப்பிட்டு இருக்கிறார். எனவே அவருக்கு மரியாதை தரும் விதமாக சாவர்க்கர் ஜி என்று நான் அழைக்க மாட்டேன்.

தொடரும் சாதிக் கொடுமைகள்
உத்தரப்பிரதேசத்தில் தற்கொலைக்கு முயன்ற 10 முதல் 11 சிறுவர்களை நான் சந்தித்து பேசினேன். ஏன் தற்கொலைக்கு முயன்றீர்கள் என்று கேட்டேன். அதில் ஒருவர் சிறுவன், தனது சகோதரர் தாக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்றேன் என்றார். மற்றொரு சிறுவனோ தினசரி தாங்கள் சந்திக்கும் சாதிக் கொடுமைகளால் தற்கொலைக்கு முயன்றேன் என்கிறார்.

மறுபிறவியிலும் தலித்
ஒரு சிறுவனிடம் நீங்கள் ஏன் திருப்பி தாக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு 'நான் அவர்களை திருப்பி தாக்கினால், மறு பிறவியிலும் தலித்தாக பிறந்துவிடுவேன். அதனால் இந்த கொடுமைகளை பொறுத்துக் கொண்டேன் என்றார்.' இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். தலித்துகள் தங்களுக்காக போராட வேண்டும். அம்பேத்கரும் காந்தியின் அந்த வழியைதான் காட்டித் தந்திருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள் இல்லாமல் அரசியலமைப்பு இல்லை. ஆனால், இன்று அரசு நிறுவனங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளன. மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோதே அரசு நிறுவனங்களை அவர்கள் கைப்பற்றத் தொடங்கிவிட்டார்கள். தற்போது ஊடகங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் அவர்கள் கையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications