கர்நாடகாவில் கொட்டி வரும் மழை.. ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து
தருமபுரி: கர்நாடகாவில் கனமழை கொட்டி வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளா, கர்நாடகா மாநிலத்தில் கனமழை கொட்டி வருகிறது. அது போல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பின.
அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டும் முன்பு அணைகளுக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் தமிழகத்தில் உள்ள காவிரியாற்றிற்கு திறந்து விடுவது வழக்கம்.

ஒகேனக்கல்
கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட அணைகளிலிருந்து வினாடிக்கு சுமார் 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன் தினம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

ஒகேனக்கல் நீர் வரத்து
ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4500 கனஅடி நீர் வரத்து பதிவானது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால் ஒகேனக்கல்லில் நீர் வரத்தும் உயர்ந்துள்ளது.

தண்டோரா
தற்போது ஒகேனக்கல்லிற்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. இதையடுத்து கரையோர பகுதிகளில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறார்கள். காவிரியாற்றிற்கு யாரும் செல்ல வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதான அருவி
நீர் வரத்து காரணமாக பிரதான அருவி, ஐந்து அருவிகள் மூழ்கி அதை தாண்டி நீர் கொட்டுகிறது. பிரதான அருவிக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. இங்குள்ள அருவிகளும் ஆர்ப்பரித்து கொட்டி வருகின்றன.












Click it and Unblock the Notifications