பிறப்பு சான்றிதழ் அவசியம்.. குடியுரிமைக்கான சான்றாக மத்திய அரசு சொல்லும் 2 ஆவணங்கள் எது? என்ன காரணம்
டெல்லி: பிறப்பு சான்றிதழ் முக்கிய அடையாளமாகிவிட்ட நிலையில், எங்கெங்கே அதனை பயன்படுத்த முடியும்? அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கடந்த வருடம் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்திய குடியுரிமைக்கான சான்றாக அறிவிக்கப்பட்டுள்ளவை எவை? குடியுரிமைக்கான சான்றாக ஆதார் கருதப்படுமா? மத்திய அரசு வலியுறுத்துவதென்ன? இதற்கு என்ன காரணம்?
தற்போதைய சூழலில், பிறப்பு சான்றிதழ் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது. ஓய்வூதிய உத்தரவு, வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கவும், மத்திய, மாநில அரசு பணிகளில் சேரவும், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், திருமணம் பதிவு செய்வதற்காகவும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்காகவும், பிறப்புச் சான்றிதழ் அவசியமாகிறது.

பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
அதாவது மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம்.. அதேபோல, பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது.. அதில், கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும், ஆனால், கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.
மீண்டும் மத்திய அரசு அதிரடி
இந்நிலையில் மீண்டும் ஒரு அதிரடி உத்தரவினை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது.. அதாவது, மேற்கு வங்கம், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில், அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக வசித்து வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன..
எனவே இந்த தகவல்களின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்தவர்களை கண்டறிந்து அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.. அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் ரேஷன் கார்டுகள் மட்டுமே வைத்திருப்பது தெரியவந்தது..
அதிரடி உத்தரவு
இதையடுத்துதான், இந்திய குடியுரிமைக்கான சான்றிதழாக பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார், பான், ரேஷன் கார்டுகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மட்டுமே பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஆதார் கார்டு வசிப்பிடத்திற்கான சான்றிதழாக கருதப்படுகிறது... ஆனால் குடியுரிமைக்கான சான்றாக கருதப்படுவதில்லை. பான், ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு பலரது கவனத்தையும் தற்போதைய சூழலில் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications