வியந்து நின்ற தர்மபுரி.. 22 வருடம் கழித்து, மொரப்பூர் ஏரியில் துள்ளிய ஆடுகள்.. விவசாயிகள் கிடா வெட்டு
தர்மபுரி: தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வறண்டு கிடந்த ஏரிகள், கண்மாய்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன.. இதையடுத்து, விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிலும் தர்மபுரி மாவட்ட மக்கள், கிடாவெட்டி பூஜையே செய்துள்ளனர்.
பெஞ்சல் புயல் காரணமாக கடும் மழை, கடலோர மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டு சென்றது.. இதனால், பிரதான அணைகள், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது..

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் 20 இடங்களில் தரைப்பாலம் மூழ்கியதால் 150 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் பரசனேரி கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா வேன்கள் மற்றும் கார்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தென்பெண்ணை ஆற்றில் இருந்து வெள்ள நீர் கடலூருக்குள் புகுந்ததால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அதிகாலை வேளையில் பதறி அடித்து மக்கள் வெளியேறினர். ஆனால், ஏரிகள் நிரம்பி, உபரி நீர் பரசனேரியை அடைந்தது.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர், அழகாபுரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இப்படி வெள்ளப்பெருக்குகள் மாவட்டங்களில் ஏற்பட்டாலும், பலகாலமாக வறண்டு கிடந்த ஏரிகள் நிரம்பியிருக்கின்றன.. இதை பார்த்து விவசாயிகள் பெருத்த மகிழ்ச்சியடைந்தனர்.
ஏரிகள் பயன்பாடு: விவசாயத்துக்கு இதுபோன்ற ஏரிகளை இவர்கள் நம்பியிருப்பதால், தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக சம்பந்தப்பட்ட ஏரியிலேயே கிடா வெட்டி பூஜை செய்வது வழக்கமாகும்.
கடந்த வருடம்கூட, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மழை தொடர்ந்து பெய்ததால், திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நிரம்பின. அதிலும் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட கந்திலி ஏரி, கடந்த 29 ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்ததாம். ஆனால், பருவமழை பெய்ததால், முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதுமே, கந்திலி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.. அந்த ஏரியிலேயே பூஜை செய்து ஆட்டுக்கிடா வெட்டி பிரியாணி சமைத்து சாப்பிட்டார்கள்.
மொரப்பூர்: இதுபோல தமிழகத்தின் பல்வேறு ஏரிகளில் கிடா வெட்டப்படுவது மரபாக இருந்து வருகிறது. அப்படித்தான் நேற்றுகூட, தருமபுரி மாவட்டத்தில் பூஜை வழிபாடு நடந்துள்ளது.. மொரப்பூர் அருகே உள்ள எம்.வேட்ரப்பட்டி கிராமத்தில் வேட்டையன் ஏரி உள்ளது. . சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் இந்த ஏரி தண்ணீரைதான் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த 22 வருடங்களுக்கு முன்பு இந்த வேட்டையன் ஏரி நிறைந்ததாம்.. அதற்கு பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து வறண்டு போய்விட்டது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்..
கிடா வெட்டு: தற்போது கடந்த சில தினங்களாகவே மொரப்பூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வேட்டையன் ஏரி நிரம்பிவிட்டது.. 22 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் குஷியாகிவிட்டார்கள்.. இதனால் வேட்டையன் ஏரியிலேயே கிடா வெட்டி கொண்டாடினார்கள்... இந்த கிடாவெட்டி நிகழ்ச்சிதான், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications