வீரப்பன் மனைவி எந்த கட்சி தெரியுமா? நாம் தமிழர் வேட்பாளரான மகள் வித்யாவுக்கு பிரசாரம் செய்ய மறுப்பு!
தர்மபுரி: மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் வீரப்பனின் மனைவியும், வித்யாராணியின் தாயுமான முத்து லட்சுமி அவருக்கு பிரசாரம் செய்ய மறுத்துள்ளார். ஏனென்றால் அவர் வேறு கட்சியில் செயல்பட்டு வருகிறார். வீரப்பன் மனைவி முத்து லட்சுமி எந்த கட்சியில் உள்ளார் என்பது பற்றிய விபரம் வருமாறு:
தமிழகத்தில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடைபெற உள்ள இந்த லோக்சபா தேர்தலில் மறைந்த வீரப்பனின் மகளான வித்யாராணி போட்டியிடுகிறார். பாஜகவில் செயல்பட்டு வந்த வித்யாராணி அங்கிருந்து விலகி சீமானின் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் வித்யாராணி வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் வித்யாராணி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் வீரப்பனின் மனைவியும், வித்யாராணியின் தாயுமான முத்து லட்சுமி வேறு கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அவர் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
உங்கள் தொகுதியில் யார் போட்டி? 40 நாம் தமிழர் வேட்பாளர்களையும் அறிமுகம் செய்த சீமான்! முழு பட்டியல்
இதுபற்றி முத்து லட்சுமி அளித்த பேட்டியில், ‛‛மக்களுக்காக தொகுதிக்காக மேம்பாட்டுக்காக தர்மபுரியில் செயல்பட்டு வருகிறேன்.மக்களுக்காக அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கையை வைத்து தமிழக வாழ்வுரிமை கட்சி மூலம் தொடர்ந்து போராடுவேன்’’ என்றார்.
இந்த வேளையில் நீங்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருக்கிறீர்கள். உங்கள் மகள் நாம் தமிழர் கட்சியில் உள்ளார். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று முத்து லட்சுமியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‛‛என் மகள் முதலில் பாஜகவில் இருந்தார். அதன்பிறகு நாம் தமிழர் கட்சியில் சேர்ந்துள்ளார். அவருக்கு எந்த சூழ்நிலை என்பது தெரியவில்லை. இப்போது அவர் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வருகிறார். அது அவருடைய சிந்தனை, கொள்கை. சுயமாக முடிவு எடுக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதன்படி அந்த கட்சியில் உள்ளார்.
கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு.. பாஜகவுக்கு சம்மட்டி அடி?
நாம் தமிழர் கட்சியில் சேர்வதற்கு முன்பு அவர் என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் கட்சியில் சேர்ந்த பிறகு என்னிடம் தெரிவித்தார். எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்கும்படி நான் கூறினேன்’’ என்றார். இதையடுத்து மகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய போவீங்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முத்து லட்சுமி, ‛‛என்னை பொறுத்தவரை கட்சி என்பது வேறு. உறவு என்பது வேறு. உறவு என்பது வீட்டுக்குள். அரசியல் என்பது வெளியே உள்ளது. நாம் ஒரு கட்சியில் செயல்படும்போது அதனை மீறி போகமுடியாது. எங்கள் கட்சி தலைவர் இன்று முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணியில் உள்ளார். அவரது அனுமதியின்றி போகமுடியாது’’ என்றார். இதன்மூலம் மகளுக்காக அவர் பிரசாரம் செய்ய மறுத்துள்ளார்.
வீரப்பன் மனைவி முத்து லட்சுமி செயல்பட்டு வரும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தொகுதி கேட்ட நிலையில் திமுக வழங்கவில்லை. இருப்பினும் அந்த கட்சி திமுகவுக்காக லோக்சபா தேர்தலில் பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications