எத்தனை நாள் ஏக்கம்.. தருமபுரி புதிய பஸ் ஸ்டாண்டு எப்போது வரும்? மக்களின் கோரிக்கை நிறைவேறுமா?
தருமபுரி: தருமபுரி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீண்ட காலமாகவே அறிவிப்போடு இருக்கும் அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பிரபலமான நகரமாக இருந்தாலும் இன்னமும் முழுமையாக வளர்ச்சி அடையாத நகராகவே தருமபுரி இருக்கிறது.

அருகில் உள்ள கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் தர்மபுரியில் இன்னமும் தொழில் மையங்கள் அதிகமாக வரவில்லை என்பது அப்பகுதி மக்களின் குறையாக இருக்கிறது.
போதிய போக்குவரத்து வசதியின்மை, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழல் ஆகியவையும் காரணங்களாக சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் நகரில் மையப் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது. மேற்கூரைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக புகார் கூறுகின்றனர் தருமபுரி வாசிகள்.
மேலும் நகரின் மையப் பகுதியில் நிலையம் இருப்பதால் பேருந்துகள் வந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சேதமாகி இருக்கும் இந்த பேருந்து நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன நெருக்கத்தை சமாளிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு அதிமுக அரசு சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த வகையில தர்மபுரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தர்மபுரியில் புதிய பேருந்து நிலையம் தனியார்- அரசு பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் என அறிவித்தார் அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி. அதனை தொடர்ந்து அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தர்மபுரியில் சுமார் 40 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதற்கான டெண்டர் பணிகளும் தொடங்கி நிலையில் கொரோனா தொற்று உள்ளிட்டவை காரணமாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நவீன பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
ஆனாலும் அந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை. பலமுறை நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படும் தற்போது வரை தர்மபுரியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான எந்த பணிகளும் தொடங்கவில்லை எனக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். எனவே விரைவில் பேருந்து நிலைய பணிகளை துவக்கி மக்களுக்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மேலும், தருமபுரியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை 4 மாதங்களில் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 15.11.2023ஆம் தேதி அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன் அதாவது 15.3.24ஆம் தேதியோடு 4 மாத காலக்கெடு முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தருமபுரி நகராட்சி 29.06.24 அன்று கட்டுமானப் பணிக்கான ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications