ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை.. 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்கித்தராத பெற்றோருடன் சண்டையிட்ட 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சாஸ்தா நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகள் ரித்திகா ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக பள்ளியில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதனால் மாணவி ரித்திகா தன்னுடைய பெற்றோரிடம் ஆன்லைன் வகுப்பிற்காக புதிய செல்போன் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளனர் இதனால் ரித்திகாவிற்கும் அவருடைய தாயாருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் ரித்திகாவை அவருடைய தாயார் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரித்திகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித்தராத காரணத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களே தற்கொலை என்றைக்கும் எதற்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணத்தை தவிருங்கள். தற்கொலை எண்ணமிருந்தால், சினோகா தற்கொலை தடுப்பு அமைப்பிற்கு 044 2464 0050 என்ற எண்ணில் அழையுங்கள்.












Click it and Unblock the Notifications