திமுக இந்திராணி எழுதிக் கொடுக்க.. அதிமுக ராஜ்மோகன் வாசிக்க! மாநகராட்சிக் கூட்டத்தில் நடந்த ‘கூட்டணி'
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினரும் மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவருமான ராஜ்மோகனுக்கு மாநகராட்சி மூன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி கேள்விகளை எழுதிக் கொடுத்து கவுன்சில் கூட்டத்தில் பேச வைத்த நிகழ்வு அரங்கேறிய நிலையில், என்ன நடக்கிறது திண்டுக்கல் மாநகராட்சியில்? என உடன்பிறப்புகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி மேயர் இளமதி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் சுதந்திர தின வாழ்த்து அறிக்கை; டிடிவி தினகரனும் வாழ்த்து

திண்டுக்கல் மாநகராட்சி
இந்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில் மாநகராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ள திமுகவைச் சேர்ந்த இந்திராணி என்பவர் நான்காவது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ள மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவரான ராஜ்மோகனிடம் கவுன்சில் கூட்ட விவாதத்திற்கு மத்தியில் பரஸ்பரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தார்.

அதிமுக கவுன்சிலருக்கு ஐடியா
ஒரு கட்டத்தில் ஒரு பேனாவை எடுத்து திடீரென ஒரு சில வார்த்தைகளை எழுதி அருகில் இருந்த அதிமுக கவுன்சிலர் ராஜ் மோகனிடம் திமுக கவுன்சிலர் இந்திராணி கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த அதிமுக கவுன்சிலர் ராஜ்மோகன் எழுந்து பேசத் தொடங்கினார். இவ்வாறாக விவாதத்துக்கு மத்தியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்த நிலையில் அவ்வப்போது திமுக கவுன்சிலர் இந்திராணி தனது கைப்பட பேனாவால் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

திமுக கவுன்சிலர் இந்திராணி
இது நடந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவை பணியாளரிடமிருந்து பேனாவை பெற்று எழுதி கொடுத்த இந்திராணி அந்த பேனாவை அவை பணியாளரிடம் கொடுத்து விட்ட நிலையில் செல்போன் மூலம் ஏதோ ஒரு தகவலை டைப் செய்து அதை அதிமுக கவுன்சிலரிடம் வழங்கினார். அதைப் படித்து பார்த்த அதிமுக கவுன்சிலர் ராஜ்மோகன் கூடுதல் தகவல்களை சிலரிடம் பெற்றுக் கொண்டு தனது கேள்விகளுடன் திமுக கவுன்சிலர் இந்திராணி கொடுத்த கேள்விகளையும் பேசினார்.

உபிக்கள் அதிர்ச்சி
மாநகராட்சி அவையின் முன்வரிசையில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இருவரும் பரஸ்பரம் பேச்சு நடத்திக் கொண்டதோடு அவையில் திமுக கவுன்சிலர் பேச வந்த கருத்துக்களை அதிமுக கவுன்சிலரை வைத்து பேச வைத்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகராட்சி மேயர் தேர்தலின் போது திமுகவில் மூன்றாவது வார்டில் வெற்றி பெற்ற இந்திராணி மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இளமதியை திமுக தலைமை கழகப் வேட்பாளராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிருப்தியில் அவர் அதிமுகவுடன் செயல்படுகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.