எங்க அண்ணனுக்கு நாங்கதான் செய்வோம்..திண்டுக்கல்லை திணறடித்த விஸ்வநாதன் விஸ்வாசிகள்! கடுகடு ’சீனி’யர்
திண்டுக்கல்: அதிமுக துணை பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திண்டுக்கல்லையே திணறடித்து விட்டனர் அவரது ஆதரவாளர்கள். நாளிதழ்களில் திருப்பிய பக்கமெல்லாம் விளம்பரம், திண்டுக்கல்லில் திரும்பிய பக்கம் எல்லாம் பிளக்ஸ் பேனர்கள் என பட்டயை கிளப்பியுள்ளனர். மாவட்டத்தில் அவருக்குத்தான் செல்வாக்கு என 'சீனி'யர் ஒருவரை திட்டமிட்டு வெறுப்பேற்றவே இந்த ஏற்பாடு என்கின்றனர் திண்டுக்கல் வாசிகள்..
முதலமைச்சராக இருந்து ஆட்சியை இழந்த போதும் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஆண்டுகளில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் எடப்பாடி தரப்புக்கு தாவி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

இதனால் கலக்கத்தில் உள்ளார் ஒபிஎஸ். குறிப்பாக கேபி முனுசாமி, நத்தம் விசுவநாதன், மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் எடப்பாடி தரப்புக்கு தாவியதை இன்று வரை ஓபிஎஸ்ஸால் நம்ப முடியவில்லை எனக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா இருந்த போதே பலத்த கோஷ்டிப் பூசல் இருந்து வருகிறது. சர்ச்சைக்கும் அதிரடிப் பேச்சுகளுக்கும் பெயர் போன திண்டுக்கல் சீனிவாசனுக்கு முன் திண்டுக்கல் அதிமுகவில் கோலோச்சியவர் நத்தம் விஸ்வநாதன். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐவர் அணியில் இடம் பெற்றிருந்த அவர் பின்னர் அவரது கோபத்துக்கு ஆளாகி ஆத்தூர் பகுதியில் ஐ.பெரியசாமி இடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதன்பிறகு அவரது செல்வாக்கு சரியத் தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாக திண்டுக்கல் அதிமுகவை மட்டுமல்ல தலைமை கழகத்திலேயே ஜெயலலிதாவுடன் நெருக்கம் காட்டியவர் திண்டுக்கல் சீனிவாசன். மாநில அரசியலில் இருப்பதால் உள்ளூர் அரசியலில் மாவட்டத்தைக் கவனித்துக்கொள்ள தனது சிஷ்யரான நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தான் சீனிவாசன்.
ஆனால் அதற்குப் பிறகு உள்ளடி வேலைகளால் சடசடவென வளர்ந்த விஸ்வநாதன் பின்னர் தனது குரு திண்டுக்கல் சீனிவாசனையே ஓரம் கட்டினார். போக்குவரத்து துறை அமைச்சர் மின்சார துறை அமைச்சர் என 10 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்தார் நத்தம். பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு திண்டுக்கல் அவைத் தலைவராக இருந்தார். ஆனால் அந்த 15 ஆண்டுகளும் அவருக்கு வனவாசம் என்று சொல்லவேண்டும்.

கட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் திண்டுக்கல் சீனிவாசனை புறக்கணித்து வந்த நத்தம் விசுவநாதன் கட்சி மேடைகளில் கூட அவருக்கு இடம் கொடுக்காமல் புறக்கணித்தது திண்டுக்கல்லைச் சேர்ந்த அனைத்து அதிமுகவினருக்குமே தெரியும். பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலின் போது மீண்டும் கட்சிக்குள் மறுபிரவேசம் செய்த திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியை கைப்பற்றினார். 100% வெற்றி வாய்ப்பை இருந்தும் நத்தம் தொகுதியில் நிற்காமல், தோல்வி உறுதி எனத் தெரிந்தே ஆத்தூரில் நிற்க வைக்கப்பட்டார் நத்தம் விசுவநாதன்.
எதிர்பார்த்தது போலவே தோல்வியைத் தழுவினார். இதையடுத்து மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல்லில் மீண்டும் பவருக்கு வந்தார் திண்டுக்கல் சீனிவாசன். பின்னர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலால் நடைபெற்ற தர்ம யுத்தத்தின் போது ஓபிஎஸ் அணியில் சேர்ந்த நத்தம் விசுவநாதன் தொடர்ந்து அவருடன் பயணித்தார். அதன்பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதன்பிறகு ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கம் காட்ட தொடங்கினார்.

ஆனாலும் திண்டுக்கல் மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களுக்கும் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்களுக்கும் ஏக பொருத்தம் தான். நத்தம் விஸ்வநாதனால் வளர்த்து விடப்பட்ட பலரும் திண்டுக்கல் சீனிவாசன் தரப்புக்கு தாவிய நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிமுகவினருக்குள் அடிக்கடி மோதல் நிலவும். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றால்கூட நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்களை மேடையில் கூட ஏற விடாமல் தடுத்து தள்ளி விடுவதும், வாக்குவாதம் செய்வது என மோதல் களைகட்டும்.
திண்டுக்கலில் தற்போது வரை அதிமுக தொண்டர்கள் மோதல் தனிப்பட்ட விரோதமாக நீடித்து வரும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் கை கோர்த்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் ஓபிஎஸ் தரப்பில் இருந்த நத்தம் விசுவநாதன், அதன்பிறகு இபிஎஸ் அணியில் நிரந்தரமாக சேர்ந்துவிட்டார்.

மேலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பதவி, அமைப்பு செயலாளர், பதவி கழக மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினர் பதவி, துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் எடப்பாடியின் ஐவர் அணியிலும் நத்தம் விஸ்வநாதன் இடம் பிடித்திருக்கிறார். ஆனாலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இரு பெரிய தலைகளுக்கு இடையே அவ்வப்போது அதிகார மோதல் வருவதாக கூறப்படுகிறது.
இருந்த போதும் சீனியரின் எல்லைக்கோட்டுக்குள் எதிரி குதித்து வந்து அத்து மீறுவது ஜூனியர் தரப்புக்கு வழக்கம் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். இந்த நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். கடந்த ஆண்டுகளில் இருந்ததைப் போல் அல்லாமல் தற்போது மிகப் பிரம்மாண்டமாக அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றனர்.

மேலும் அதிகாலையிலேயே நத்தம் விஸ்வநாதன் வீட்டுக்குச் சென்று கேக் வெட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் திண்டுக்கல், தேனி, மதுரை பகுதிகளில் வெளியான பிரபல நாளிதழ்கள் அனைத்திலும் நத்தம் விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்து பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்திருக்கின்றனர். இதுவரை இவ்வளவு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரது அதிமுக மாவட்டத்திற்கு இல்லாத பகுதிகளிலும் திரும்பிய பக்கம் எல்லாம் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நத்தம் விஸ்வநாதன் தான் எல்லாமும், என 'சீனி'யர் ஒருவரை வெறுப்பேற்றுவதற்காகவே இவ்வாறு செய்திருக்கிறார் என குமறுகின்றனர் 'திண்டுக்கல்' வாசிகள்.












Click it and Unblock the Notifications