அசிங்கம் செய்த பாஜக மாவட்ட செயலாளர்.. பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதால் வழக்குப்பதிவு.. பதவி பறிப்பு!
திண்டுக்கல்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர் இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக பள்ளிகூடத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் வந்துள்ளார். பெண் சமையலரை வழிமறித்த பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன், சமையல் செய்யும் இடத்தில் கணக்கு பார்க்க வேண்டும் என கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது சமையல் கூடத்தில் இருந்த பொருட்களை எடுத்துக்காட்டி கொண்டிருக்கும் போது அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார் மகுடீஸ்வரன். இதனையடுத்து அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த அந்தப் பெண் சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மகுடீஸ்வரன் மீது மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் போது மகுடீஸ்வரன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்து தலைமறைவான மகுடீஸ்வரனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மகுடீஸ்வரன் வகித்து வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய பார்வையாளர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரனை நீக்க, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications