பொங்கல் பண்டிகைக்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி! ஐ.பெரியசாமி அப்டேட்! ரூ 1500 or ரூ 2000?
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடந்த ஒரு விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடந்த பொங்கல் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், பொங்கல் பண்டிகை முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தியை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.

அது 15-ஆம் தேதியாக இருக்கலாம், 16 ஆம் தேதியாகவும் இருக்கலாம். ஆனால் பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என பெரியசாமி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றும், எப்போதும் ஒற்றைக் கட்சி ஆட்சிதான் நிலவும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரும் இதில் உறுதியாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வந்த நிலையில், இது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழலில்தான் அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஐ. பெரியசாமி மேலும் கூறுகையில், "கேட்பது அவர்களின் உரிமை. ஆனால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிசீலிக்கவில்லை. எப்போதுமே இங்கு கூட்டணி ஆட்சி கிடையாது. இங்கு எப்போதுமே தனிக் கட்சியின் ஆட்சிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியெல்லாம் இருக்காது. கூட்டணி ஆட்சியில்லை என்பதில் முதல்வரும் உறுதியாக உள்ளார்" என்றார்.
தற்போது பெண்களுக்கு பொங்கல் பரிசு வழங்க போவதாக அமைச்சர் கூறியுள்ளதை பார்த்தால் மாதாமாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் ரூ1000 கொடுத்து வரும் நிலையில் அதை ரூ. 1500 அல்லது ரூ.2000 உயர்த்தி வழங்கலாம் என தெரிகிறது.
தமிழகத்தை பார்த்து தங்கள் மாநிலங்களிலும் மகளிர் உரிமைத் தொகையை அறிவித்த மாநிலங்களில் உரிமைத் தொகை ரூ. 1000-த்தை விட அதிகமாகவே வழங்கப்படுகிறது. எனவே வரும் சட்டசபை தேர்தலையொட்டி மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு அதிகரிக்கும் என தெரிகிறது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சில கண்டிஷன்கள் உளளன. அதை பூர்த்தி செய்வோர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்தால் அதை அதிகாரிகள் பரிசீலனை செய்து அந்த நபர் தகுதியானவரா இல்லையா என்பதை பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications