அணில் சேமியா.. ஆசையா வாங்கி பிரிச்சா உள்ளே அது என்ன கருப்பா?.. அதிர்ச்சியில் தேவகோட்டை
திண்டுக்கல்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணில் சேமியாவை விரும்பி சாப்பிடுகின்றனர். அது ஜோரான டிஸ் என்று விளம்பரமும் செய்கின்றனர். சேமியா மட்டுமல்லாமல் ரவை, மாவு வகைகளை, சிறு தானிய பொருட்களை கொண்டு பல உணவு பொருட்களை தயார் செய்யும் அணில் சேமியா பாக்கெட்டில் இருந்த இறந்து காய்ந்து போன தவளை தேவகோட்டை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஹோட்டல்களில் சாப்பிடும்போது புழு, பல்லி, எலி எல்லாம் கூட சாம்பாரில், பிரியாணியில் இருப்பதை பார்த்து அதை போட்டோ வீடியோ எடுத்து போடுவார்கள். இப்போது அணில் சேமியா பாக்கெட்டில் தவளை இருந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மளிகைக்கடையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்து பபோன நிலையில் தவளை இருந்துள்ளது.

தேவகோட்டையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் தீபாவளி பண்டிகைக்கு சமைப்பதற்காக மளிகைப் பொருட்களை அங்கிருந்த கடையில் வாங்கியுள்ளார். அதில் அணில் சேமியாவை அவர் சமைப்பதற்காக நேற்று திறந்து பார்த்த போது இறந்து போன தவளை இருந்தது. உடனே மளிகைகக் கடையில் போய் புகார் கூறினார் பூமிநாதன். அதற்கு அந்த கடைக்காரரோ நான் பேக்கிங்கை பிரித்து பார்க்க வில்லை பிரபல கம்பெனி என்பதால் வாங்கி விற்பனை செய்கிறேன் இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மிகப்பெரிய கம்பெனியாக இருப்பதால் இதை மறைக்காமல் உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில் தொழிற்சாலையில் இது போன்ற தவறு நடக்க வாய்ப்பு இல்லை என்று அணில் சேமியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான அணில் அப்பளம் பாக்கெட்டை விற்பனை செய்த மளிகைக் கடை சர்ச்சையில் சிக்கியது. திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்த ஜியாஉசேன் என்பவர் திண்டுக்கலில் உள்ள ஒரு கடையில் அணில் அப்பளம் வாங்கி உள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்து பிரித்து பார்த்த போது அதில் வெள்ளை நிற புழு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் கூறினார்.
உணவு துறை அதிகாரிகள் அந்த கடையில் இருந்த அனைத்து பாக்கெட்டுகளையும் பிரித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவை அனைத்திலும் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறையினர் அணில் சேமியா நிறுவனத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
காலாவதியான பாக்கெட்டுகளை கடைகளில் விற்பனை செய்ததே புழு உற்பத்தியாக காரணம் என்பது தெரிய வந்தது. தற்போது அணில் சேமியா பாக்கெட்டிற்குள் இறந்து காய்ந்து போன தவளை எப்படி வந்திருக்க கூடும் என்பது மர்மமாக உள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும்.












Click it and Unblock the Notifications