5 ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி..மணக்க மணக்க கறிக்குழம்பு! வயிறும் மனசும் நிறைஞ்சு போச்சு.. எங்க தெரியுமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே கோவில் திருவிழாவில் 500 ஆட்டுகிடாய் வெட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதான விருந்து நடைபெற்றது. மலை மலையாய் சோறு சமைக்கப்பட்டு அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு கறிவிருந்து நடைபெற்றது.
தென் மாவட்டங்கள் பொதுவாக திருவிழா என்றாலே அது கறிவிருந்துடன் மட்டுமே நடைபெறும். குறிப்பாக இரவு நேரத்தில் நடைபெறும் வினோத திருவிழாக்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகின்றன.

அப்படி பார்க்கையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோயில், மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழாவில் 70 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
வினோத திருவிழாக்கள்: இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் கன்னிபெண் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம். இப்படி நிறைய இடங்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாக்கள் பிரபலம்.
கறி விருந்து: ஆனால் ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி நடத்தப்படும் ஒரு கறிவிருந்து திருவிழா நடத்தப்படும் ஒரு திருவிழாவும் உண்டு. பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் தான் அது. பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
500 கிடாய்கள்: இந்நிலையில் இந்த ஆண்டு பெரியதுரையான் கோயில் சித்திரைத்திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 500 ஆட்டு கிடாய்கள் மற்றும் 300 கோழிகள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிமுதல் கிடாய் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டது.
அன்னதானம்: பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு வெட்டப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களை பயன்டுத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டன. மதியம் சமைக்கப்பட்ட உணவுகளை, அருள்மிகு பெரியதுரையான் கருப்பணசாமி கங்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications