திண்டுக்கல் பெண் அரசு அதிகாரிக்கு பெரிய சிக்கல்.. வேறு அக்கவுண்டில் குவாரி பணம்? ஐகோர்ட் அதிரடி
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப்பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று குற்றம்சாட்டினார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 60 குவாரி உரிமையாளர்களிடம் இருந்து வேறு ஒருவர் வங்கிக்கணக்கு மூலம் கனிமவளத்துறை பெண் அதிகாரி லஞ்சம் வசூலித்தது தொடர்பான குற்றச்சாட்டை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "நான் மாற்றுத்திறனாளி. பட்டப்படிப்பு முடித்துவிட்டு நீண்டநாளாக எனக்கு வேலையே கிடைக்கவில்லை.

2018-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் தற்காலிகாக பணியாளராக கணக்காளர் பணியில் சேர்ந்தேன். 2022-ம் ஆண்டில் மாரியம்மாள் என்பவர் இந்த துறையின் உதவி இயக்குனர் பொறுப்பு பணியை ஏற்றார். அவர் தற்காலிக பணியில் இருந்த என்னை நீக்கி விட்டார். பின்னர் அவருக்கு உதவியாளராக மட்டும் வேலை செய்யும்படியும் அதற்கான ஊதியம் தருவதாக உறுதி கொடுத்தார்.
அதன்பேரில் வேலை செய்தபோது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப்பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளிடம் ஒப்படைத்து வந்தேன். இவ்வாறு குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சப்பணத்தை வசூலித்து அவரிடம் கொடுத்து வந்தேன். அப்போது போலி நடைச்சீட்டு வழங்கியதாக புகார் எழுந்தது. அதற்கு நான் தான் காரணம் என மாரியம்மாள் என்னை குற்றம்சாட்டினார்.
இதனால் அவரது தூண்டுதலின்பேரில் குவாரி உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை என்னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். எனக்கும், இந்த விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வங்கி கணக்கில் செலுத்தும் தொகையை அப்படியே மாரியம்மாளிடம் கொடுத்து வந்தேன். ஆனால் குவாரி உரிமையாளர்கள் இதை நம்ப மறுக்கின்றனர். இதனால் நானும், எனது தாயாரும் 2 முறை வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
எனவே 60-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்களிடம் இருந்து மாரியம்மாள் லஞ்சப்பணத்தை வங்கிக்கணக்கு மூலமாக பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. எனவே எனக்கும், என் தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்ன உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி வாதிடுகையில், இந்த விவகாரத்தில் கனிமவளத்துறை அதிகாரி மாரியம்மாள் மீது ஏற்கனவே வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். விசாரணை முடிவில், வங்கிக்கணக்கில் குவாரி உரிமையாளர்கள் லஞ்சம் செலுத்தியது தொடர்பான மேற்கண்ட குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட போலீசார் விசாரிக்க வேண்டும். அந்த விசாரணை அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications