நத்தம் விசுவநாதன் மச்சான் கண்ணனுக்கு பெரிய சிக்கல்.. டெண்டரை மொத்தமாக ரத்து செய்த கலெக்டர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் மைத்துனருமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ரூபாய் 3.5 கோடி டெண்டர் ரத்து செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக ஆர்.வி.என்.கண்ணன் உள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதனின் மைத்துனர் ஆவார். அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார் கண்ணன். ஊரக உள்ளாட்சி தேர்தலில் நத்தம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில் அதிமுக - 15, திமுக - 5 என வென்றது. இதனால் அதிமுக ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நத்தம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் 10 ஆக உயர்ந்து அதிமுகவின் பலம் 15ல் இருந்து 10 ஆக குறைந்தது. தற்போது சரிசமமாக இரு தரப்பிலும் கவுன்சிலர்கள் உள்ளதால் ஒன்றிய சேர்மன் கண்ணன் நெருக்கடியைச் சந்தித்து வந்தார்.
நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக ஒன்றிய சேர்மன் கண்ணன் மீது புகார் எழுந்தது. இந்நிலையில், அந்த டெண்டரை ரத்து செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்படுவதற்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications