கொடைக்கானலுக்கு போறவங்க இந்த தப்ப பண்ணிடாதீங்க.. வாகன பெர்மிட் ரத்தாகிடும்.. கலெக்டர் போட்ட உத்தரவு
திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தடை செய்யப்பட்ட தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வந்தால் வாகனங்களின் 'பெர்மிட்' ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சோதனைசாவடிகளில் தீவிர பரிசோதனை நடைபெறுகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகும் குளுமையான சூழலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக இருக்கும். மிகச்சிறந்த கோடை வாசஸ்தலமாக உள்ள கொடைக்கானல் உள்ளது.

கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் குளு, குளு சீசன் நிலவுகிறது. இதனால், இயற்கையின் ரம்மியத்தை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அதிலும் கோடைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். எனினும், சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாக அங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், முக்கிய அம்சமாக பாலித்தீன் பைகள், 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை தீவிரமாக அமல்படுத்தும் விதமாக கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வகையான வாகனங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
தடையை மீறி கொண்டுவரப்படும் பாலித்தீன் பைகள், தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் ஒருசிலர் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வருகிறார்கள். இதை தடுக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன்படி, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் 5 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வந்தால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் 'பெர்மிட்' ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து, கொடைக்கானலுக்கு செல்லும் பாதையில் உள்ள செக்போஸ்ட்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், 5 லிட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வாகனங்களில் எடுத்து வரப்படுகிறதா? என்று சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் வாகன பெர்மிட் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தும் வருகிறார்கள்.
கொடைக்கானலுக்கு வெளியூர்களில் இருந்து சுற்றுலாவிற்கு வாடகை வேன்கள், கார்கள், பேருந்துகளில் அதிக அளவு வருகை தருகிறார்கள். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் வாகன பெர்மிட் ரத்து ஆகும் என்பதால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் விழிப்புணர்வுடன் வருகை தந்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வராமல் இருந்தால் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியும்.












Click it and Unblock the Notifications