நாலரை கோடிப்பே.. மாநகராட்சி வரி பணத்தை ஏப்பம் விட்ட சரவணன்! சஸ்பெண்டான அதிகாரிகள்.. பரபர திண்டுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் செய்த பணத்தில் ரூபாய் 4 கோடியே 66 லட்சத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்திருக்கும் நிலையில், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்கலாம் என கூறப்படுவதால், மாநகராட்சி பணியாளர்கள் இடையே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
நகராட்சியாக இருந்த திண்டுக்கல் , 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, அடியனூத்து உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது.
நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை, பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை, வரி வசூல் விவகாரங்களில் ஊழல் முறைகேடு, ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை, என பல முறைகேடுகளில் திண்டுக்கல் மாநகராட்சி சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் மாநகராட்சியில் வரி வசூல் செய்த பணத்தில் ரூபாய் 4 கோடியே 66 லட்சத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்திருக்கும் நிலையில், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த போது இறந்த காரணத்தினால் வாரிசு அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சி இளநிலை உதவியாளராக சரவணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வீட்டு வரி, குழாய்வரி, பாதாள சாக்கடை வரி, போன்றவற்றிற்கான தொகையை நாள்தோறும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து கட்டு வது வழக்கம். பொதுமக்கள் செலுத்துகின்ற பணத்தை வசூல் செய்யும் ஊழியர்கள் சரவணனிடம் அதற்கான கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம். நாள்தோறும் வசூல் ஆகக்கூடிய பணத்தை உதவி ஆணையர், உதவி கணக்கு அலுவலர், மற்றும் கணக்காளர் ஆகியோரிடம் கணக்கை காட்டி வங்கியில் செலுத்தக்கூடிய செலானில் (CHALAN) கையொப்பம் பெற்று வங்கியில் சரவணன் செலுத்த வேண்டும்.
ஆனால் நாள் தோறும் வசூலாகும் பணத்தை கணக்குபடி முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் சரவணன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. வசூல் பணத்திலிருந்து தனக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தி உள்ளார். வங்கியில் பணம் செலுத்தும் செலானில் (CHALAN) மூன்று அதிகாரிகளின் கையெழுத்துக்களையும் போலியாக போட்டு தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதி தொகையை கட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி பல நாட்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மாநகராட்சி வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சரவணனிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தணிக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் ரூ 4 கோடியே 66 லட்சம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சரவணனை பணியிட நீக்கம் செய்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் சரவணன் பணி காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததன் பேரில் சரவணன் பணிக்காலம் முழுவதும் ஆய்வு செய்யும்படி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனருக்கு ஆணையர் ரவிச்சந்திரன் கடிதம் எழுதி உள்ளார். இதைத் தொடர்ந்து வரி வசூல் மற்றும் வங்கியில் பணத்தை செலுத்துவதை முறையாக கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications