உல்லாச வாழ்க்கை! திண்டுக்கலில் திருட்டு வேலை பார்த்த அதிகாரிகள்! வரிப் பணம் ஸ்வாகா..சிக்கிய இருவர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப் பணம் 4.69 கோடி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தற்போது, திண்டுக்கல்லை சேர்ந்த இளஞ்செழியன், சாணார்பட்டியை சேர்ந்த முரளி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகராட்சியாக இருந்த திண்டுக்கல், 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதையடுத்து நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, அடியனூத்து உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டம் கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அறிவிப்பு வந்தும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது. நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை.

மேலும், பல முறைகேடுகளில் திண்டுக்கல் மாநகராட்சி சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் மாநகராட்சியில் வரி வசூல் செய்த பணத்தில் ரூபாய் 4 கோடியே 66 லட்சத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த போது இறந்த காரணத்தினால் வாரிசு அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாநகராட்சி இளநிலை உதவியாளராக சரவணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் வீட்டு வரி, குழாய்வரி, பாதாள சாக்கடை வரி, போன்றவற்றிற்கான தொகையை நாள்தோறும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து கட்டுவது வழக்கம். பொதுமக்கள் செலுத்துகின்ற பணத்தை வசூல் செய்யும் ஊழியர்கள் சரவணனிடம் அதற்கான கணக்குகளை ஒப்படைப்பது வழக்கம். நாள்தோறும் வசூல் ஆகக்கூடிய பணத்தை உதவி ஆணையர், உதவி கணக்கு அலுவலர், மற்றும் கணக்காளர் ஆகியோரிடம் கணக்கை காட்டி வங்கியில் செலுத்தக்கூடிய சலானில் கையொப்பம் பெற்று வங்கியில் சரவணன் செலுத்த வேண்டும்.
ஆனால் நாள் தோறும் வசூலாகும் பணத்தை கணக்குபடி முழுவதுமாக வங்கியில் செலுத்தாமல் சரவணன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. வசூல் பணத்திலிருந்து தனக்குத் தேவையான தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தி உள்ளார். வங்கியில் பணம் செலுத்தும் செலானில் (CHALAN) மூன்று அதிகாரிகளின் கையெழுத்துக்களையும் போலியாக போட்டு தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதி தொகையை கட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோசடி பல நாட்களாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சியில் உள்ள தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது மாநகராட்சி வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் சரவணனிடம் விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தணிக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் ரூ 4 கோடியே 66 லட்சம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வரி வசூல் மைய இளநிலை உதவியாளர் சரவணன், கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ், நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் ஆகியோர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் சில மாதங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்இ குமரேசன் தலைமையிலான போலீசார் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். மோசடி செய்த பணத்தில் சரவணனிடம் தலா ரூ.30 லட்சம் பெற்றதாக திண்டுக்கல்லை சேர்ந்த இளஞ்செழியன், சாணார்பட்டியை சேர்ந்த முரளி ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளஞ்செழியன், முரளி மோசடி பணத்தில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். அவற்றை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications