தட்டி தூக்கும் திண்டுக்கல்..10 கி.மீ.க்கு விரிவடையும் எல்லை.! மாநகராட்சியில் இணையும் ஊராட்சிகள் எவை?
திண்டுக்கல் : தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில், அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிறிய எல்லையுடன் இருந்த திண்டுக்கல் மாநகராட்சி சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
நகராட்சியாக இருந்த திண்டுக்கல் , 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது வரை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படாமல், காலம் தாழ்த்தப்பட்டது பொதுமக்களை கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.

அதையடுத்து நகராட்சி எல்லைக்குள் இருந்த 48 வார்டுகளுடன் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பால கிருஷ்ணாபுரம், பள்ளபட்டி, அடியனூத்து உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நகர வளர்ச்சி இல்லாமல் திண்டுக்கல் பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக இருந்து நகராட்சி போலவே செயல்பட்டு வருகிறது. நகர எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முடியவில்லை, பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை, வரி வசூல் விவகாரங்களில் ஊழல் முறைகேடு, ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை, என பல முறைகேடுகளில் திண்டுக்கல் மாநகராட்சி சிக்கித் தவிக்கிறது.
இதனையடுத்து மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டி நாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பள்ளப்பட்டி, பொன்மாந்துறை, பிள்ளையார் நத்தம், அடியனூத்து, தோட்டனூத்து, முள்ளிப்பாடி ஆகிய ஊராட்சிகள் திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைகின்றன.
கூடுதலாக 113 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள பகுதியும், ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 323 என்ற எண்ணிக்கையான மக்கள் தொகையும் திண்டுக்கல் மாநகராட்சி உடன் இணைகிறது. அந்த வகையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ள திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்த மக்கள் தொகை மூன்று லட்சத்து 31 ஆயிரத்து 548 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சி, கொடைக்கானல் நகராட்சி ஆகியவையும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றன. தற்போது பழனி நகராட்சியுடன் சிவகிரிபட்டி, கோதை மங்கலம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 55 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு பழனி நகராட்சியுடன் இணைகிறது. மேலும் 25 ஆயிரத்து 800 என்ற எண்ணிக்கையிலான மக்கள் தொகையும் பழனி நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. தற்போது ஆறு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே பழனி நகராட்சி இருக்கும் நிலையில் எல்லை விரிவாக்கத்திற்கு பிறகு சுமார் 62 சதுர கிலோமீட்டர் ஆக இருக்கும். மக்கள் தொகை 70 ஆயிரத்திலிருந்து 96 ஆயிரம் ஆக அதிகரிக்கிறது.
இதே போல கொடைக்கானல் நகராட்சியுடன் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஊராட்சியான வில்பட்டி ஊராட்சியை இணைக்க பணிகள் தொடங்கியுள்ளது. 333 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வில்பட்டி ஊராட்சியில் மக்கள் தொகை 15 ஆயிரத்து 800 ஆக உள்ளது இந்த ஊராட்சி இணைப்புக்கு பின் சுமார் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள கொடைக்கானல் நகராட்சி 354 சதுர கிலோமீட்டர் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications