சஜூவுக்கு திண்டுக்கல்லில் என்ன வேலை? சித்தாள் பெண்கள் தான் குறி! செல்போன்களை பார்த்து மிரண்ட போலீஸ்!
திண்டுக்கல்: கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை கூலி வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அவர்களிடம் நகை பணத்தை பறித்த கேரளாவைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது பல பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய வீடியோக்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த நபர் திண்டுக்கல்லில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அளவில் மிகப்பெரிய மாவட்டமான திண்டுக்கல்லில் விவசாயமே பிரதானமாக இருக்கிறது. மேலும் கட்டிடம், நெசவு போன்ற தொழில்களிலும் பெரும்பாலான கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திண்டுக்கல் நகரில் நாகல் நகர், காட்டாஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் காலையில் நூற்றுக்கணக்கான கட்டிடத் தொழிலாளிகள் காத்திருப்பார்கள்.
அங்கு வரும் மேஸ்திரிகள், கட்டுமான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நாட்கூலி அடிப்படையில் தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை அழைத்து செல்வார்கள். இதனால் காலை 10 மணி வரை இரு பகுதிகளிலும் அதிக அளவில் கூட்டம் இருக்கும்.

திண்டுக்கல் குற்றம்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் கூலி தொழிலாளி ஒருவர் வேலைக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கட்டிட வேலைக்கு பெண் தேவை எனவும், கொத்தனார் இருக்கும் நிலையில் சித்தாள் வேலைக்கு மட்டும் ஒரே ஒரு பெண் தேவை என கூறி இருக்கிறார். இதை அடுத்து அந்த பெண் வேலைக்கு வருவதாக கூறிய நிலையில் தனது காரில் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.
பெண் தொழிலாளி
திண்டுக்கல் புறநகர் பகுதிக்கு சென்றதும் திடீரென காரை நிறுத்திய அந்த நபர் அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கத் தோடை பறித்துவிட்டு அவரை காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கேரள நபர்
அதன் அடிப்படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், கேரள மாநிலம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த 28 வயதான சஜு என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சஜு, திண்டுக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளிவந்தது.
போலீஸ் விசாரணை
கேரள மாநிலம் இடுக்கி, மூணாறு, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கூலி வேலைக்கு என பெண்களை அழைத்துச் சென்று அவர்களிடம் நகை பணத்தை பறிப்பது தான் சஜுவின் வேலை என்கின்றனர் போலீசார். மேலும் சஜுவின் மூன்று செல்போன்களை ஆராய்ந்த போது பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் அதிலிருந்து. மேலும் சில பெண்களை மிரட்டி சஜூ பாலியல் ரீதியாக அத்துமீறியதோடு அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.
ஆபாச வீடியோ
நகை பறிப்பு மட்டுமல்லாமல் பெண்களிடமும் சஜு அத்துமீறிய வீடியோக்களை கைப்பற்றியுள்ள போலீசார் இது தொடர்பாக தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி வேலைக்கு என பெண்களை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சஜூவின் பின்னணி குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் திண்டுக்கல் போலீசார்.












Click it and Unblock the Notifications