தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திமுகவைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலரும், பிரபல தொழிலதிபர் திண்டுக்கல் ரத்தினத்தின் மகனுமான வெங்கடேசன் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சனிக்கிழமை இந்த இணைப்பு நடக்கும் என்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், முதன்முறையாக திமுகவைச் சேர்ந்த முக்கிய இளம் நிர்வாகி ஒருவர் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களின் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் தொழில் மற்றும் சமூக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட பெயராக இருப்பவர் திண்டுக்கல் ரத்தினம்.

தொழில்துறையில் பல ஆண்டுகளாக செல்வாக்குடன் செயல்பட்டு வரும் அவர், தென் மாவட்டங்களில் பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரது இளைய மகன்தான் வெங்கடேசன். வெங்கடேசன் வேறு யாருமல்ல திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரான திண்டுக்கல் ரத்தினத்தின் இளைய மகன் தான் வெங்கடேசன், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து திமுகவில் இணைந்து அவருக்கு பகுதி செயலாளர் பொறுப்பும் இளைஞர் அணி அமைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அப்போதைக்கு துணை மேயர் பதவி கேட்டு சீனியர் அமைச்சர் உதவியுடன் கோபாலபுரம் வீட்டு கதவை தட்டினார் திண்டுக்கல் ரத்தினம். அப்போதைக்கு அது கைகூடாத நிலையில் தமிழகத்தின் மிக இளம் வயது எம்எல்ஏ என்ற பெருமையை பெற வேண்டும் என்பதற்காக 2026 சட்டமன்ற தேர்தலில் மகனை போட்டியிட வைக்க தீவிரமாக காய் நகர்த்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் எளிமையான வாழ்க்கையை தொடங்கிய திண்டுக்கல் ரத்தினம் அதற்கு பிறகு சேகர் ரெட்டி உடனான நெருக்கத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் அறிந்த நபர் ஆனார். தென் மாவட்டங்களில் மணல் குவாரி, கல்வி நிறுவனங்கள் என தொழிலை விரிவு படுத்தியவர் தற்போது தனது மகனை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். திமுக தரப்பில் இருக்கும் ஒரு மூத்த அமைச்சர் மூலம் தனது தொழில் நெருக்கத்தை வைத்து திண்டுக்கல் ரத்தினம் தனது மகனை போட்டியிட வைக்க முயற்சித்தார்.
கட்சியில் சேர்ந்த உடனேயே சில பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்ட்ரெய்ட்டா எம்எல்ஏ தான் என்ற முனைப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கேட்டார். மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தனது வார்டு மக்களை தொடர்ந்து 'கவனித்து' வரும் அவர் அடிக்கடி பரிசு பொருட்கள் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
மேலும் அவரது தந்தையான திண்டுக்கல் ரத்தினம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவுவது, கோவில் திருவிழாக்களுக்கு நன்கொடை தருவது என பொதுமக்களிடையே செல்வாக்கை அதிகரித்து வருவதால் இந்த முறை வெங்கடேசனுக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படியும் வெற்றி பெற்று வரலாம் என திமுக தலைமையிடம் எடுத்துச் சொல்லி சீட்டு பெற முயற்சித்தனர். ஆனால் அப்போது அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி செந்தில்குமார் திண்டுக்கல்லில் நின்றதால் வெங்கடேசனுக்கு வாய்ப்பு தரவில்லை.
இதனையடுத்து அப்போதே தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோல்நடக்கவில்லை. இந்நிலையில் வரும் சனிக்கிழமை வெங்கடேசன் ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுன் பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தில் இனையவுள்ளார். ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் மூலம் இந்த இணைப்பு நடக்கவுள்ளது . இணைப்பு நடந்த பின் திண்டுக்கல்லில் 50 ஆயிரம் பேருடன் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி இணைப்பு விழாவை நடத்த வெங்கடேசன் தரப்பு திட்டமிட்டுள்ளது.















Click it and Unblock the Notifications