100 அண்டா.. 50 ஆடுகள்.. 100 கிலோ ஆட்டுக்கறி.. விடிய விடிய திண்டுக்கல் விருந்து.. கமகம மட்டன் குழம்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்படியென்ன விசேஷம் இந்த திருவிழாவில்?
விநோத திருவிழாக்கள் என்பது இப்போது தமிழகத்தில் பெருமளவு பெருகி கொண்டே வருகிறது.. அதில் ஒன்றுதான், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள்.. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களை போலவே, ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக கொண்டாடப்படும் திருவிழாக்களும் உண்டு.
உதாரணத்துக்கு சிவகங்கை அருகே உள்ள திருமலை கிராமத்திலும், மடைக்கருப்பசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருவிழா நடக்கிறது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், சித்திரை திருவிழாவின்போது, ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள்.

உசிலம்பட்டி: ஒவ்வொரு ஊர் கோயில் திருவிழாவுக்கும் ஒரு பின்னணி காரணங்கள் புதைந்துள்ளன. இப்படித்தான் உசிலம்பட்டி அருகே உள்ள எருமார்பட்டியில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று மட்டும் திருவிழா நடைபெறும்.. இந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்..
நாயக்கர்கள் காலத்தில், ஜோதில்நாயக்கனூர் ஜமீனை சேர்ந்தவர்கள் அந்த ஊரில் பிறந்த ஜக்கம்மாவை பெண் கேட்டு சென்றார்களாம்.. ஜமீனை திருமணம் செய்ய மறுத்த ஜக்கம்மாள், மனமுடைந்து எருமார்பட்டி அருகே உள்ள மலையிலிருந்து குதித்து இறந்து போய்விட்டாராம். அவரது உடலை எருமார்பட்டியை சேர்ந்தவர்கள் எரியூட்டியிருக்கிறார்கள்.
அருள்வாக்கு: ஆனால், வருடந்தோறும், இறந்த நாளில் தனக்கு வழிபாடு நடத்தும்படியும், தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய முயற்சித்த ஜமீன், பூமியில் மலையளவு நெல் விளைந்தாலும் கடுகளவும் கொள்ளு விளையாது'' என்றும் ஜக்கம்மாள் அருள்வாக்கு சொன்னாராம்.. ஜக்கம்மா சொன்னதுபோலவே, வருடந்தோறும் இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
அவர் வாக்குப்படியே, இந்த பகுதியில் யாருமே கொள்ளு பயிரிடுவதும் இல்லை. கோயில் பகுதியில் சுடுகாடு இருந்ததால் பெண்கள் இந்த வழிபாட்டில் எப்போதுமே கலந்து கொள்வதுமில்லையாம்.
திண்டுக்கல்: அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் தற்போது திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு வருடங்களாகவே, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா நடக்கிறது.. ஆனால், பிறந்த குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையில் பெண்கள் யாருமே இந்த திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இந்த விழாவின்போது, ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது வழக்கமாகும். நேற்றிரவும் இந்த திருவிழா தொடங்கியது.. நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு துவங்கப்பட்டது. பிறகு, நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டன.. உடனடியாக சமையல் வேலையும், ஆரம்பமாகின.. 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. அடுத்து கமகம கறிவிருந்து தயாரானது.
கறிவிருந்து: இறுதியில், 3,000 மேற்பட்ட ஆண்களுக்கு இன்று காலைக்குள் அசைவ விருந்து செய்யப்பட்டது.. மொத்தம் 100 அண்டாக்களில் சாப்பாடு தயார் செய்யப்பட்டது. சாதம், ஆட்டுக்கறி குழம்பு இவைகளை பிரசாதமாக ஆண்களுக்கு வழங்கப்பட்டது.
நத்தம், உண்ணாம்பட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இந்த கறிவிருந்தில் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் விடிய விடிய சமைத்து, காலையில் அனைவரும் ஒன்றுகூடி விருந்து சாப்பிட்டார்கள். வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து, இந்த கறிவிருந்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications