கழுதை மேய்க்க தான் லாயக்குனு பேசுனாங்க..அதை செஞ்சே மாசம் 50000 சம்பாதிக்கிறேன்! கணீரென பேசும் கண்ணன்
திண்டுக்கல்: தமிழகத்தில் உள்ள கிராமங்களில் 'நீ எல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு' என இளைஞர்களை திட்டுவதை பார்த்திருக்கலாம். ஆனால் அதை வைத்தே மாதத்திற்கு 50 ஆயிரம் சம்பாதிக்கிறேன் என்கிறார் கண்ணன். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழுதை பால் விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக கூறுகிறார்..
'அழுத பிள்ளைக்கு கழுதை பால் கொடு' என கிராமங்களில் அடிக்கடி பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை சலவைத் தொழிலில் அதிகமாக கழுதைகள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வளர்ப்பு கழுதைகளின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமார் 1500 கழுதைகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடலூரில் குறிப்பாக விருதாச்சலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் கழுதை வளர்ப்பில் அதிக அளவு ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் மழைக் காலங்கள் அல்லாத காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கால்நடையாக சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போதெல்லாம் ஊருக்கு ஊர் சலவைத் தொழிலாளிகள் கழுதை வளர்ப்பார்கள். அவர்களிடம் ஒரு சங்கு கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். தற்போது கழுதைகள் எண்ணிக்கை குறைந்திருக்கும் நிலையில் இதையே ஒரு தொழிலாக குறிப்பிட்ட சில மக்கள் செய்து வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுதை பாலை குடிக்கலாம். கழுதை பாலை குடிக்கும் போது பித்தம், பந்தம், மப்பு, சொரி சிரங்கு, இழைப்பு, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் அகன்று விடும். மேலும் அவை மேலும் தீண்டாது. குழந்தைகளுக்கு கழுதை பால் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சுகாதாரமற்ற முறையில் கழுதைப் பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்தால் சில நோய் தாக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மக்கள் மத்தியில் கழுதை பாலுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம் இருக்கிறது என சொல்லலாம். நீ எல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னார்கள் ஆனால் அதை வைத்தே மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன் என்கிறார் கடலூரைச் சேர்ந்த இளைஞரான கண்ணன். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழுதை பால் விற்பனை செய்திருக்கிறார். அவருடன் அவரது உறவினர்களும் கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூரில் இருந்து திருச்சி வழியாக தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ள அவரது குடும்பத்தினர் கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு சங்கு கழுதை பால் ( 10 மில்லி முதல் 15 மில்லி வரை இருக்கும்) 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் கழுதை பால் 8000 முதல் 10,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். அவர் வளர்க்கும் கழுதை ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை பால் கறக்கும் நிலையில் ஒரு நாளைக்கு தனக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்கிறார்.
மீதமுள்ள பாலை கழுதை குட்டிகளுக்கு உணவாக கொடுக்கின்றனர். தற்போது வளர்ப்பு கழுதைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ள நிலையில் ஒரு கழுதை 60 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனையாவதாக சொல்கிறார் கண்ணன். மேலும் கழுதை பால் விற்று தான் மாதம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும், பல நகரங்களில் கழுதை பால் விற்பனை தொழில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறுகிறார். அதே நேரத்தில் ஆட்டுப் பண்ணை, கோழி பண்ணை போல கழுதை பண்ணைகளையும் அமைக்கவும் வளர்க்கவும் அரசு இளைஞர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறார்.












Click it and Unblock the Notifications