"திராவிட நல் திருநாடு" போஸ்டர் ஒட்டி கொடைக்கானலில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கறுப்பு கொடி போராட்டம்!
திண்டுக்கல்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொடைக்கானலில் பல இடங்களில் திராவிட நல் திருநாடு என்கிற போஸ்டர்களை ஒட்டி இருந்தனர் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள்.
சென்னையில் அண்மையில் பொதிகை தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது திராவிட நல் திருநாடு என்ற வார்த்தை பாடாமல் தவிர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இனவாதம் பேசுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். திராவிட நாடு வார்த்தை தவிர்ப்புக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொடைக்கானலில் 'திராவிடர் நல் திருநாடு' என்ற வாசகங்களுடன் ஏராளமான போஸ்டர்களை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஒட்டியிருந்தனர்.
மேலும் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கறுப்புக் கொடிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் மருதமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் இராசு, மதுரை மாவட்டச் செயலாளர் மணிஅமுதன், தேனி மாவட்ட அமைப்பாளர் தேனி ராயன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். பின்னர் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். இதனால் கொடைக்கானல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications