ஊராட்சி மன்றத் தலைவரே நகை திருடினால்.. இந்த ஆட்சி உருப்படுமா? திண்டுக்கல்லில் கொந்தளித்த எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 பவுன் நகை திருட்டுப் போனது. சிசிடிவி காட்சியைப் பார்த்ததில் திமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் திருடியிருக்கிறார் என்று கண்டுபிடித்துள்ளனர். அவர் மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் இருக்கின்றன. இந்த ஆட்சி உருப்படியாகுமா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திண்டுக்கல், மணிக்கூண்டு அருகே கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "திமுகவின் 51 மாத கால ஆட்சியில் திண்டுக்கல் தொகுதிக்கு பெரிய திட்டம் எதுவும் கொடுக்கவில்லை. இதுவே அதிமுக ஆட்சியில் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை 350 கோடியில் அமைத்துக் கொடுத்தோம்.

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. சிறுமி முதல் பாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. சென்னை நெற்குன்றம் பகுதியில் 4 பவுன் நகை திருட்டுப் போனது. சிசிடிவி காட்சியைப் பார்த்ததில் திமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் திருடியிருக்கிறார் என்று கண்டுபிடித்துள்ளனர். அந்தம்மா மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் இருக்கின்றன. இந்த ஆட்சி உருப்படியாகுமா? இந்த ஆட்சி திருட்டுக் கும்பல் ஆட்சி. ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நன்மை செய்பவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

திமுக ஊழல்

ஆனால் திருட்டு வழக்கில் உள்ளவரைத் தேர்வு செய்வதால் இப்படி நடக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் 4 கோடியே 66 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. இங்குதான் மாநகராட்சி இருக்கிறது. சரியான இடத்தில்தான் கூட்டத்தை திண்டுக்கல் சீனிவாசன் அமைத்திருக்கிறார். மக்கள் எதற்காக வரி கட்டுகிறார்கள்..? குடிநீர் வழங்கவும், கழிவுநீர் அகற்றவும், குப்பை அகற்றவும் வரி கட்டுகிறார்கள். அந்த வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பல் திமுக கும்பல். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் கிளம்பிவிட்டார்கள். எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம் என்று கிளம்பிவிட்டனர்.

இபிஎஸ் விமர்சனம்

கோவை, காஞ்சிபுரம், நெல்லை மாநகராட்சிகளில் மேயர், கவுன்சிலர்கள் இடையே பங்கு பிரிப்பதில் பிரச்சனை. எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த முறைகேடுகள் எல்லாம் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையிலும் 200 கோடி கொள்ளையடித்துவிட்டனர். மக்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்து, மேயரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார், அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக ஆட்சி

குழுத் தலைவர்கள் எல்லாம் ராஜினாமா செய்துள்ளனர். கேவலம் இந்த ஆட்சியில் பன்றிக்குக் கூட வரி போட்டுவிட்டனர். நாய், பன்றி, ஆடு, மாடு எல்லாவற்றுக்கும் வரி போட்டு அந்த வரியை கொள்ளைக் கும்பல் பாகம் பிரித்து நீதிமன்றம் வரை போய்விட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் நடந்த ஊழல்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் ஊழல்

இது சின்ன ஊழல், டாஸ்மாக் பெரிய ஊழல். 10 ரூபாய் பாலாஜியை நாங்கள் மறந்தாலும் நீங்கள் மறக்க மாட்டீர்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள், இதில் 2500 பார்களை திமுகவினரே எடுத்துக்கொண்டனர். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. கூடுதலாகப் பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக டாஸ்மாக் பணியாளரே சொல்கிறார், அந்த மேலிடம் யார் என்பது உங்களுக்கே தெரியும். அமலாக்கத்துறையே இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது.

அமலாக்கத்துறை

அமலாக்கத்துறை விசாரித்ததில் ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக செய்தி வெளியானது. முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கும் என்று செய்தி வருகிறது. திமுகவின் நான்காண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர். ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கியதில்தான் சாதனை படைத்தது திமுக அரசு. 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ஆம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் கடன் சுமை அதிகமாகியுள்ளது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+