அமைச்சர் ஐ.பெரியசாமியை வரவேற்க ஆயிரம் வாலா..காதணி விழா பந்தலில் பற்றிய தீ.. தெறித்து ஓடிய உறவினர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்ட காதணி விழாவில் அவரை வரவேற்க திமுகவினர் சரவெடி வைத்தபோது விழா பந்தலில் தீ பற்றியதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் மிக மூத்த நிர்வாகியும், மாவட்டத்தில் இரு மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் ஐ.பி என கட்சியினரால் அழைக்கப்படும் ஐ.பெரியசாமி.
கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராக இருந்த அவர், தற்போதைய திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அப்போதைய அதிமுக முக்கிய புள்ளியாக இருந்த நத்தம் விஸ்வநாதனை தோற்கடித்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு "கமா" வைத்தவர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

தொகுதியில் செல்வாக்கு
அந்த அளவுக்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர் ஐ.பி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆத்தூரில் எந்தப் பகுதிகளில் திருவிழா, திருமணம், காதணிவிழா மட்டுமல்லாது துக்க நிகழ்ச்சிகள் நடந்தாலும் கூட முதல் ஆளாய் கலந்து கொள்வது இவரது வழக்கம். இதற்காகவே தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைத்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். இதே பாசம் தான் தற்போது வரை தொடர்கிறது. சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.

காதணி விழா நிகழ்ச்சி
இந்த நிலையில்தான் தனது சொந்த தொகுதியில் கட்சியினரின் செயல்பாடுகள் காரணமாக தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளார் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் பகுதியில் என்ற திமுக பிரமுகரின் இல்ல காதணி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐ.பெரியசாமி அழைக்கப்பட்டிருந்தார். அமைச்சரான பிறகு அவர் சொந்த தொகுதியில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அவரை வரவேற்க திமுகவினர் ஃபிளக்ஸ் பேனர்கள் , வான வேடிக்கை என பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திடீர் தீ விபத்து
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர் பெரியசாமி வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக பலத்த சத்தம் எழுப்பும் வகையில் பத்தாயிரம் வாலா சரவெடி வெடிக்கப்பட்டது. படபடவென வெடித்துச் சிதறிய பட்டாசு எதிர்பாராத விதமாக காதணி விழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பட்டது. ஏற்கனவே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பந்தல் திடீரென தீப்பற்றி எரிந்த தீ, பந்தல் முழுவதும் பரவி கரும் புகையுடன் வானை நோக்கி சுடர் விட்டது. இதையடுத்து அங்கிருந்தோர் அலறியடித்து ஓடிய நிலையில் அமைச்சரும் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் தற்போது பந்தலில் தீ பற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications