திண்டுக்கல் வங்கிக்கு ட்விஸ்ட்.. கோடீஸ்வரராகிய நகை மதிப்பீட்டாளர்.. கடைசியில் சிக்கியது எப்படி?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தூரில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் போலி தங்க நகை அடகு வைத்து ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 3 பேர் மீது புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலி நகைகளை அடகு வைத்து எப்படி மோசடி செய்தார்கள் என்பதை பார்ப்போம்.
தங்க நகைகளின் விலை ஒரு பவுன் 72 ஆயிரம் என்கிற அளவில் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த ஓராண்டில் மிகப்பெரிய அளவில் உயர்ந்திருப்பதால் நகை அடகு வைத்து கடன் பெறுவது அதிகரித்துள்ளது. அதேபோல் சிலர் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுவிடுகிறார்கள். சில வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர்களே போலி நகைகளை அடகு வைத்து வங்கியிடம் கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளனர். அப்படி ஒரு தவறு தான் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வங்கியில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் உதவி பொது மேலாளர் வின்ஜமுரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
1 கோடி மோசடி
அந்த மனுவில் அவர் கூறுகையில், "எங்கள் வங்கியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறு நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 55 வயதாகும் கருப்பாயி , அவருடைய உறவினர்கள் சோனாஸ்ரீ (26), தங்கராஜ் ஆகியோர், ரூ.1 கோடியே 25 லட்சம் கடனுக்காக வங்கியில் அடகு வைத்த நகைகள் அனைத்தும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நகை மதிப்பீட்டாளரின் உதவி
பின்னர் நடத்திய விசாரணையில், எங்கள் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்க்கும் பாண்டிகுமார், மறு நகை மதிப்பீட்டாளர் சுரேந்திரன் ஆகியோர் உதவியுடன் கருப்பாயி மற்றும் அவரின் உறவினர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலி நகைகள் அடகு
இந்த மனுவை பெற்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் உள்பட 5 பேரும் சேர்ந்து போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடி செய்தது உறுதியானது.
3 பேர் கைது
இதையடுத்து பாண்டிகுமார், சோனாஸ்ரீ, கருப்பாயி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கராஜ் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகை மதிப்பிட்டாளர் மற்றும் நகை மறுமதிப்பீட்டாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி நகைகளை அடகு வைத்து மொத்த வங்கியையும் ஏமாற்றிய சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications