பழனி கோவில் கருவறை ‘போட்டோ’.. எப்படி பரவியது? செல்போனை ஏன் உள்ளே விட்டீங்க? ஐகோர்ட் சரமாரி கேள்வி!
திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கோயில் கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அண்மையில், பழனி கோவில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் பழனி முருகன் கோவில் கருவறையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையும் தெரிந்தது.

இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கோவில் கருவறையை செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று விதி இருந்தும் பக்தர்கள் விதிகளை மீறி திருக்கோவில் கருவறையை படம் பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல உயர் நீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் கருவறைக்குள் போனில் புகைப்படம் எடுத்தது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
முருகன் கோவில் கருவறை வரை ஒருவர் சென்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோவிலுக்குள் செல்போன், கேமரா போன்ற சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என விதிமுறை இருந்தும் எப்படி கருவறை வரை சென்று புகைப்படம் எடுத்தனர் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பழனி தண்டாயுதபாணி கோயில் கருவறை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது எப்படி? கோயில்களுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடையை அமல்படுத்தாதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக கோவில் இணை ஆணையர் சார்பில், பழனி கோவிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் செல்போன், கேமரா பயன்படுத்த தடை உள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், பாதுகாப்பு சோதனையும் 24 மணி நேரமும் நடைபெறுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் கோவில்களில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் தரவேண்டும் என்றும், கருவறை வரை ஒருவரை அனுமதித்து புகைப்படம் எடுக்க காரணமாக இருந்த கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications