பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதை ஆக்கிரமிப்பு.. உயர்நீதின்றம் முக்கிய உத்தரவு
திண்டுக்கல்: பழனி கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படுகிறது என்று தொடரப்பட்ட வழக்கில்,கிரிவலப்பாதை நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு குறுகிய காலக்கெடு விதிக்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
உலக புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தான், மற்ற எல்லா முருகன் கோயிலையும் விட அதிகப்படியான பக்தர்கள் வரும் இடமாக உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் முருகன் கோயிலாகவும் பழனி திகழ்கிறது.

பழனி முருகன் கோயிலுக்கு செல்லும் பாதை மிகவும் நெரிசலான பாதையாக உள்ளது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. நீதிமன்றமும் பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்புகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது.
இந்த விவாகரம் தொடர்பாக சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறியுள்ளதாவது:-பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பழனி கிரிவலப்பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதன் காரணமாக பக்தர்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவை முறையாக அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு அந்த மனுவில் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் , “பழனி கோவில் அடிவார பகுதிகளில் 139 ஆக்கிரமிப்பாளர்கள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்பு, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும். மாற்று இடத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்களிடம் உறுதிமொழி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் தங்களுக்கு வழங்கப்படும் மாற்று இடத்துக்கு பட்டா வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கூறி உறுதிமொழி அளிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் கோவில் நிலங்களை மீட்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று வாதிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மாற்று இடங்களுக்கு செல்ல மறுக்கும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து, உறுதிமொழி அளிக்க குறுகிய காலக்கெடு விதித்து காலி செய்ய வைக்க வேண்டும். அதன்பின்னர் ஆக்கிரமிப்புகளை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications