அதிமுக தலைமை விவகாரம்.. நீதிமன்றம் தீர்மானிப்பது ஏற்புடையதல்ல.. சொல்வது கார்த்தி சிதம்பரம்!
திண்டுக்கல்: அதிமுக தலைமையை நீதிமன்றம் தீர்மானிப்பது ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், அரசாங்கத்தில் பங்கு இல்லை. மக்கள் பிரச்னைகளை எங்களால் முன்வைக்க முடியவில்லை. எதிர்க்கட்சியாகவும் செயல்பட முடியாத நிலை உள்ளது என்று கூறி பகீர் கிளப்பினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று வந்துள்ளார். மலைக்கோயில் செல்வதற்கு முன்பாக அதன் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார்.

கார்த்தி சிதம்பரம் பேட்டி
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே சிறையில் அடைக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடங்கும் முன்பே சிறையில் அடைத்தது முறையல்ல.

சுறுசுறுப்பான முதல்வர்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுறுசுறுப்பாக வெளிப்படையான முதலமைச்சராக செயல்படுகிறார். இதனால், மக்களிடம் அவருக்கு நாள் நாளுக்கு மதிப்பு உயர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.

சுங்கக் கட்டண உயர்வு
பின்னர் சுங்கக் கட்டணம் உயர்வு குறித்து கருத்து தெரிவித்த அவர், மத்திய பாஜக அரசு ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பைத் தொடர்ந்து, எரிபொருட்களின் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சரியான முறையில் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.
தற்போது, சுங்கக் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றனர். ஏற்கெனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கனரக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இது மேலும் சுமையை ஏற்படுத்தும். இதனால், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுக விவகாரம்
தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்த கேள்விக்கு, அதிமுக வழக்கில் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தலைமை போட்டிக்கு வரும் போது உறுப்பினர்களே முடிவு செய்ய முடியும். நீதிமன்றம் அதனை தீர்மானிப்பது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications