Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழா: பூ ரதத்தில் உலா வந்த மாரியம்மன்.. சிலிர்த்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கோட்டை மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் நகரத்தின் ரத வீதிகளில் பூத்தேர் பவனிவர வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களை தூவி அம்மனை வழிபட்டனர்.

திண்டுக்கல் நகரில் கேட்டவருக்கு கேட்ட வரம் தரும் சக்தியாக விளங்குகிறார் கோட்டை மாரியம்மன். கோட்டையின் அடிவாரத்தில் அமைந்த மாரியம்மன் என்பதால் அன்னைக்கு 'கோட்டை மாரியம்மன்' என்ற பெயர் வழங்கப்படலானது. மலைக்கோட்டையின் கீழே கோட்டை குளத்திற்கு கிழக்கே கவாத்து மைதானத்தில், திப்புசுல்தான் காலத்தில் ராணுவத்தினரால் சிறுபீடமும், அதன் பின்புறம் மாரியம்மன் நிறுவப்பட்டு, ஊரின் காவல் தெய்வமாகத் திகழ்ந்தது. இதுவே இன்றைய கோட்டை மாரியம்மன் திருக்கோவிலாகப் புகழ் பெற்றுள்ளது.

 Masi festival begins at Kottai Mariamman Temple Rock Fort in Dindigul

புராண காலத்தில் 'பத்மகிரி’, 'திண்டீச்சுரம்’, 'நெல்லிவனம்’ என்றும், தற்போது 'திண்டுக்கல்’ என்றும் அழைக்கப்படும் இந்த ஊரில், காணப்படும் மலையானது திண்டு போல் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்தது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் நடுப்பகுதியில் அமைந்த நகரம் இது. சேரமன்னன் தர்மபாலன், மலை மீது பத்மகிரி நாதருக்கும், அபிராம்பிகைக்கும், கோவில் எழுப்பி இருந்ததாகவும், இதனை கி.பி. 1538-ல் அச்சுத தேவராயர் புனரமைத்தார் என்றும் வரலாறு கூறுகிறது.

கி.பி. 1605-ல் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் மலை மீது கோட்டை கட்டினார். திருமலை நாயக்கர் - ராணி மங்கம்மாள் திருப்பணிகள் செய்தனர். கி.பி. 1772-ல் ஐதர்அலியின் சகோதரர் மீர்சாகிப் மற்றும் ஆங்கிலேயர்களும் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.

தேவியின் சக்தி அம்சங்களில் ஒன்றான ரேணுகாதேவி, அக்னி வடிவானவள். ஜமதக்கினி முனிவரின் பத்தினியாக ரேணுகாதேவி விளங்கினார். அப்பகுதியை ஆண்ட கார்த்தவீர்யார்ச்சுனன், முனிவரிடம் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு முனிவர் மறுக்கவே, மன்னனும் அவனது மகன்களும் சேர்ந்து முனிவரை கொன்றனர். முனிவரின் சிதையில் ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினாள்.

அப்போது ரேணுகாதேவியை காப்பதற்காக இந்திரன் வேண்டுதல்படி, வருணன் மழை பொழிந்து அக்னியை அணைத்தார். ஆனால் ரேணுகாதேவியின் ஆடைகள் எரிந்த நிலையில், அவர் வேப்பிலையை ஆடையாக அணிந்து கொண்டார்.

அப்போது அங்கு தோன்றிய சிவபெருமான், நீ மானிடப் பிறவியல்ல. என் தேவியின் அம்சங்களில் ஒன்றானவள். நீ இந்தப் பூவுலகில் வாழ்ந்து மக்களுக்கு 'மாரியம்மன்’ என்ற பெயரில் அருள்புரிந்து மக்களைக் காப்பாயாக என்றார். இப்படி உருவான தேவியே 'மாரியம்மன்.’ இந்த அன்னைக்கு வேப்பிலை ஆடையே விருப்பம். மாவு இளநீர் பானகமும் ஆகியவையே நிவேதனம் பொருட்கள் ஆகும்.

அன்னை வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடக்கி, ஆவுடையார் பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். எட்டுக் கரங்கள் கொண்டு, வலதுபுறம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதம், இடதுபுறம் அரிவாள், வில், மணி, கிண்ணம் தாங்கி அன்னை அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆண்டு மாசித்திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. பூ அலங்காரத்துடன் பல்வேறு கோலங்கள் இடப்பட்டு மாசித் திருவிழாவை திண்டுக்கல் நகர பக்தர்கள் வரவேற்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ரதவீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி தொடங்கியது.

கோட்டை மாரியம்மன் பூவால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் நகரில் உள்ள முக்கிய வீதிகளான மேற்கு ரத வீதி. பழனி ரோடு, கிழக்கு ரத வீதி என முக்கிய வீதிகளில் கோட்டை மாரியம்மன் பவனி வந்ததைக் கண்டு ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக நின்று உதிரிப் பூக்களை காணிக்கையாக செலுத்தி தரிசித்தனர்.

ரதவீதிகளில் பலரும் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்கினர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த பூத்தேர், மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலை அடைந்தது. கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியதையடுத்து, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து பூக்குழி இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் ஆகிய நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். மாசி பெருந்திருவிழாவை சிறப்பாக கொண்டாட திண்டுக்கல் நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+