பணக்காரர்கள் வீட்டு திருமணத்திற்கே காங்கிரஸ் செல்லும்! ஜோதிமணி முன்பு வார்த்தையை விட்ட ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் வருவர் என கரூர் எம்பி ஜோதிமணி முன்னிலையில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் வீராசாமியின் இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், சுழன்று சுழன்று எல்லா பணிகளை செய்தாலும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது பெருமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கருணாநிதியிடம் தேதி கேட்கச் சென்றால், முதலில் தேதி கொடுப்பதற்கு பதில் திருமண தேதியை கேட்பார். மறுமுறையும் அவரிடம் "உங்களுக்கு தோதுபடும் தேதியை" சொல்லுங்கள் என திருமண வீட்டார் கேட்பது வழக்கம். இந்தியாவிலேயே எளிமையான முதல்வர், மக்களோடு கலந்திருக்கும் துணை முதல்வர் உள்ளிட்டோரை நாம் பார்க்க முடியாது.
சாமானியர்களை மதித்து
சாமானியர்களை மதித்து சாமானியர்களுக்கு அரசியல் அரங்கத்தில் பதவிகள், பட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக. இதை யாராலும் மறுக்க முடியாது. இங்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருக்கிறார். காங்கிரஸில் பெரிய தலைவர்கள் பணக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்வார்கள், அவர்களைக் குறைத்துக் கூறவில்லை.
திமுகவை பொருத்தமட்டில்
ஆனால் திமுகவை பொருத்தமட்டில் சாமானியர்களை உயர்த்தி பிடித்து மதிப்பளிக்கக் கூடிய இயக்கம். பணத்தால், செல்வத்தால் நாம் உயரவில்லை. திமுகவால்தான் உயர்ந்திருக்கிறோம். திமுகவுக்கு சமமாக எந்த இயக்கமும் வர முடியாது என தெரிவித்தார்.
காங்கிரஸுடன் மோதல் போக்கு
திமுக கூட்டணியில் காங்கிரஸுடன் அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பெரியசாமியின் பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே தமிழக காங்கிரஸில் ஒரு கோஷ்டி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைக்க கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பெரியசாமியின் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.
கோடீஸ்வரர்கள்
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து கோடீஸ்வரராக இருந்தவர்கள் இப்போது லட்சாதிபதியாகிவிட்டனர். லட்சாதிபதியாக இருந்தவர்கள், இப்போது பிச்சைக்காரர்களாகிவிட்டனர்.
பெரியசாமியின் பயணியர் விடுதி
பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு இல்லாத கட்சி காங்கிரஸ். கடந்த 1996ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த பெரியசாமி, தன்னிடம் ஏழை மக்கள் தந்த மனுக்களை அவர் தங்கியிருந்த பயணியர் விடுதியின் பாத்ரூமில் வீசி சென்றுவிட்டார்.
பெரியசாமி மூப்பனார்
செய்தித் தாள்களில் படத்துடன் அந்த செய்தி வந்தது. அதை பார்த்து நான் அவரை "பாத்ரூம் பெரியசாமி" என விமர்சித்தேன். அப்போது மூப்பனார் என்னை கண்டித்தார். கூட்டணி கட்சியில் இருக்கும் போது அப்படி விமர்சிக்கக் கூடாது என மூப்பனார் என்னிடம் கூறினார்.
பெரியசாமிக்கு தகுதி இல்லை
ஆனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் குறித்து பேசக் கூடாது என்பது பெரியசாமிக்கு தெரியவில்லை. காங்கிரஸ் மீது குற்றம்சாட்ட பெரியசாமிக்கு தகுதியே இல்லை என அவர் விமர்சித்துள்ளார். அண்மையில் கூட காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திமுகவில் ஒரு நிர்வாகி இணைந்த போது, ஸ்டாலின் தலைமையை ஏற்க வந்தார் என செந்தில் பாலாஜி வரவேற்றது கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications