குப்பையில் ஜெயலலிதா படம்.. கடுப்பான அதிமுக! திமுக கீழ்த்தரமாக போகாது.. அமைச்சர் சக்கரபாணி பதில்!
திண்டுக்கல்: அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட அரசு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை குப்பையில் தூக்கி அரசு அதிகாரிகள் எறிந்ததாக புகார் எழுந்த நிலையில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டியில் கிடந்ததை, அறிக்கையை பார்த்த பிறகு தான் எனக்கே தெரியும் என அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கும் முன்னர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மின் பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த குப்பை தொட்டியில் வீசி உள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதிமுகவினர் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் அமைச்சரின் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் மீது அமைச்சர் சக்கரபாணி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத் தொட்டியில் கிடந்தது அதிமுகவினரின் அறிக்கையை பார்த்த பிறகு தான் எனக்கே தெரியும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," வேடசந்தூரில் நடைபெற்ற அரசு விழாவின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை குப்பைத்தொட்டியில் போட்டதற்கு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பாக வேடசந்தூரில் செயற்பொறியாளர் திறந்து வைக்கப்பட்டது.
அதில் நானும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வந்தோம். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி விட்டு வந்த பிறகு அதிமுகவினரின் அறிக்கையை பார்த்த பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரிய வந்தது. இது போன்ற கீழ்த்தரமான அரசியலை திமுக என்றுமே செய்யாது. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உருவப்படமும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் உருவப்படமும் ஒட்டப்பட்டிருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய புத்தகப்பைகளை வழங்கும் முன்னர் அதிகாரிகள் முதல்வரிடத்தில் இதில் முன்னாள் முதல்வர்கள் படம் இடம்பெற்றிருக்கிறது என்று கூறியதற்கு கூறியதற்கு முதல்வர் தமிழக முதல்வர் புத்தகப் பைகளை மீண்டும் அச்சடித்து வழங்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டதற்கு 75 கோடி ரூபாய் செலவாகும் என அதிகாரிகள் கூறினர். இதை அடுத்து முதல்வர் பெருந்தன்மையுடன் அந்த படங்கள் அப்படியே இருக்கட்டும் விட்டுவிடுங்கள். அவர்களின் படம் இருந்தாலும் பரவாயில்லை. பள்ளி மாணவர்களுக்கு அந்த பைகளை கொடுங்கள் என பெருந்தன்மையோடு கூறி நடந்து கொண்டவர் முதல்வர்.
அதனால் அவர் வழியில் வந்த நாங்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் என்றைக்கும் ஈடுபட மாட்டோம். அதிகாரிகள் யாராவது செய்திருப்பார்களே ஒழிய அவர்கள் யாராவது எடுத்துக் கொண்டு போய் வைத்திருக்கலாம். எங்கள் கவனத்திற்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் அதுபோன்று நடக்க விடமாட்டோம். எல்லோரையும் நாங்கள் மதிக்க கூடியவர்கள், அம்மையாராக இருந்தாலும் சரி மற்ற யாராக இருந்தாலும் சரி. எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அனைத்து கட்சியினரையும் நாங்கள் அரவணைத்து செல்லக் கூடியவர்கள். அந்தப் பண்பு தலைவர் கலைஞரும் சரி இன்றைய முதலமைச்சரும் சரி எங்களை அப்படித்தான் ஆளாக்கி இருக்கிறார்கள் அப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியத்தில் நாங்கள் ஈடுபட மாட்டோம்" என்றார்.












Click it and Unblock the Notifications