புதிய ரேசன் கார்டு வேண்டுமா? இனி கவலையே வேண்டாம்! 15 நாளில் வந்துடும்.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடுஉணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சக்கரபாணி கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில், அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.2.24 கோடி மதிப்பீட்டில் 64 பயனாளிகளுக்கு பணி ஆணை மற்றும் 115 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் கடலூர் மாவட்டத்தில் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குடும்ப அட்டை
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 51 மாதங்களில் 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 66,000 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரேசன் கடைகள்
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் 3000 முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. கலர்சாப்டர் இயந்திரம் பொருத்தப்பட்ட 700 அரிசி அரவை ஆலைகள் மூலம் நெல் அரவை செய்யப்பட்டு, கறுப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்படுகிறது. கலைஞர் ஆட்சிக்காலத்தில் 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 53 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு 44.94 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 2025-ஆம் ஆண்டு 45.50 இலட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் கனவு இல்லம்
தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லமும் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications