நவபாஷாண சிலை முதுகு சுரண்டப்பட்டதா? பழனி முருகன் கோவிலில் திடீர் ஆய்வு..மெளனம் காக்கும் அதிகாரிகள்!
திண்டுக்கல்: கடந்த சில நாட்களுக்கு முன் பழனி முருகன் கோவிலில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஐஐடி குழுவினருடன் நவபாஷாண சிலையை திடீரென ஆய்வு செய்ததால் மூன்று மணி நேரம் தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஆய்வு நடந்து 3 நாட்களாகியும் ஆய்வு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாதது பக்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதற்கு நவபாஷாண சிலை என்று பேர் ஏற்பட்டது. நவ என்றால் ஒன்பது என்று பெயர். 18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷாண சிலையைச் செய்தார் என்பது வரலாறு.
நவபாஷாணம் என்பது, கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷாணம், ரத்த பாஷாணம், கம்பி நவரசம், குதிரைப் பல், லிங்கம், கெளரி பாஷாணம், சீதை பாஷாணம் என்கிற ஒன்பது வகையான மிக அபூர்வமான மூலிகைகளையும், விஷங்களையும் கொண்டு மிகக்கடினமான செய்முறைகளால் உருவாக்கப்படுவது. இம்மூலிகைகளை இனம்கண்டறியும் திறன் பழங்கால சித்தமருத்துவர்களுக்குக் கூட கிடையாது என்பதுதான் உண்மை. இத்தகைய பெருமைமிக்க நவபாஷாண மூர்த்தியை செய்து முடித்த போகர், அதை பிரதிஷ்டை செய்ய செவ்வாயின் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதியைத் தேடினார்.
அப்போது, அதற்கு பொருத்தமான இடமாக கிடைத்ததுதான் இந்த பழனி மலை. நவபாஷாண சிலையின் சிறப்பம்சமே மனிதனுக்கு ஏற்படுவது போல இரவில் இந்தச் சிலைக்கு வியர்க்கும் என்பதுதான். இரவில் ராக்கால பூஜையின் போது சிலையின் மேனி முழுவதும் சந்தனம் பூசப்படும். சிலைக்கு அடியில் வியர்வையை பிரசாதமாக சேகரிக்க ஒரு பாத்திரமும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலையில் சிலையின் மேனியில் உள்ள சந்தனத்தை வழித்தெடுக்கும் போது அந்த சந்தனத்தில் வியர்வை துளிகள் பச்சை நிறமாக ஒட்டிக்கொண்டிருக்கும் என்றும், பாத்திரத்திலும் நீர் நிரம்பி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கெள்பீணத் தீர்த்தம் என அழைக்கப்படும் இது உலகெங்கும் காணக் கிடைக்காத அதிசயமான அருமருந்து என கூறுகின்றனர். இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நவபாஷாண முருகர் சிலை சேதமடைந்து வருவதாக கூறப்பட்டது. இதை அடுத்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா நவபாஷாண சிலைக்கு கவசம் அணிவிக்கும் முடிவை எடுத்தார். ஆனால் பல்வேறு எதிர்ப்புகளால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நவபாஷாண சிலை குறித்து பல்வேறு வதந்திகளும் உலாவுகிறது. முருகன் சிலையின் முதுகுப் பகுதி சிறிது சிறிதாக சுரண்டப்பட்டு, 'சிலருக்கு' விற்பனை செய்யப்பட்டதாகவும், சிலை மாற்றப்பட்டதாகவும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனையடுத்து உயர் நீதின்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் சிலை பாதுகாப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம், திடீரென பழனி மலைக்கோவிலுக்கு சிலை பாதுகாப்பு கமிட்டியினர் வருகை தந்ததை அடுத்து, பிம்ம சுத்தி யாகம் நடத்தப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் பழனி கோவில் கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர். அப்போது சிலையின் உறுதித் தன்மை, சிலையின் திருமேனி ஏதேனும் சேதம் ஆகி உள்ளதா ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் மற்றும் ஐஐடி பேராசிரியர்கள், திருக்கோவில் இணை ஆணையர் மாரிமுத்து , முன்னாள் இணை ஆணையர் நடராஜன் மற்றும் திருக்கோவில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிலை பாதுகாப்பு குழுவினரின் திடீர் ஆய்வால் மூன்று மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்தனர்.
ஆனால் ஆய்வு முடித்து சென்ற சிலை பாதுகாப்பு குழுவினரும் நிபுணர்களும் இது குறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆய்வின் போது கருவறையில் அதிகாரிகள், குழுவினர் தவிர யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை, கடந்த முறை ஆய்வு நடந்த போது அது கூட்டம் நடத்தப்பட்டு ஆய்வு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
தற்போது ஐஐடி நிபுணர்களும் வந்திருக்கும் நிலையில் சோதனையின் போது ரசாயனங்கள் ஏதும் பயன்படுத்தப்பட்டதா? இயந்திரங்கள், கருவிகள் ஆய்வுக்கு உபயோகப்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை என பக்தர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சிலை சேதமானதால்தான் ஆய்வு குழு நியமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது நடந்திருக்கும் ஆய்வு குறித்த எந்தவித அறிவிப்பு அறிக்கையோ கோயில் நிர்வாகம் தரப்பிலோ, சிலை பாதுகாப்பு குழு தரப்பிலோ தெரிவிக்கப்படாதது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
எனவே முறையாக ஆய்வு குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும், சிலையின் நிலை குறித்த தகவலையும் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பதை பக்தர்களின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications