இயக்குநர் மோகன் ஜி மீது புதிய வழக்கு.. ஜாமீனில் வந்தாலும் விடாத பழனி போலீசார்.. பிரிவுகள் இதுதான்
திண்டுக்கல்: பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான கருத்துகளை கூறி அவதூறு பரப்பியதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜியை திருச்சி போலீசார் நேற்று கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன் தொடர்ச்சியாக மோகன் ஜி மீது பழனி தேவஸ்தானம் அளித்த புகாரில் பழனி போலீசார் 2 பிரிவுகளில் அதிரடியாக இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமாக லட்டு தயாரிப்பு என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான ஆய்விலும் கூட பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், சோயாபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் கலக்கப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் தான் திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவில் பஞ்சாமிர்தமும் விவாதப்பொருளாகி உள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பிலும் கலப்படம் உள்ளதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முற்றிலுமாக மறுத்துள்ளார். அதேவேளையில் தொடர்ந்து சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியது.
இதுதொடர்பாக மோகன் ஜி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‛‛பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் பொருட்கள் கலக்கப்படுவதாக செவி வழி செய்தியாக நான் கேட்டு இருக்கிறேன்'' என்று கூறியிருந்தார். இது விவாதமான நிலையில் மோகன் ஜி மீது போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன.
திருச்சியை எடுத்து கொண்டால் சமயபுரம் மாரியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை மேலாளர் கவியரசு என்பவர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தார். இந்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் உத்தரவில் நேற்று மோகன் ஜி சென்னை ராயபுரத்தில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு திருச்சி நீதிமன்றத்தில் நேற்று மாலை இயக்குனர் மோகன் ஜி ஆஜர்ப்படுத்தப்பட்டார். மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே தான் மோகன் ஜி மீது பழனி தேவஸ்தானம் சார்பில் பழனி அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. பழனி கோவில் பஞ்சாமிர்தம் பற்றி தவறான கருத்துகளை கூறிய இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரை தொடர்ந்து மோகன் ஜி மீது 2 பிரிவுகள் பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்களிடம் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் என்று மொத்தம் 2 பிரிவுகளில் மோகன் ஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு தொடர்பாக மோகன் ஜி-க்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த பழனி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications